January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பங்களாதேஷ் டெஸ்ட்;புதிய மைல்கல்லை எட்டிய திமுத், திரிமான்ன

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தலைவர் திமுத் கருணாரத்ன 5 ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 2 ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களையும் கடந்து சாதனை படைத்துள்ளனர்.

அத்துடன், திமுத் கருணாரத்ன 12ஆவது டெஸ்ட் சதத்தையும், லஹிரு திரிமான்ன 3 ஆவது டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்தனர்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி கண்டி – பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமான்ன ஜோடி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்து முதல் விக்கெட்டுக்காக 209 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று வலுச்சேர்த்தனர்.

இதன்படி, அடுத்தடுத்த மூன்று இன்னிங்ஸ்களில் முதல் விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டத்தைப் பெற்றுக்கொண்ட ஆரம்ப ஜோடியாக புதிய சாதனை படைத்தனர்.

தனது 72 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய திமுத் கருணாரத்ன, 12ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்ததுடன், டெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 10ஆவது இலங்கை வீரராகவும், உலகளவில் 97ஆவது வீரராகவும்  புதிய சாதனை படைத்தார்.

திமுத் கருணாரத்னவுக்கு முன்னர் 9 இலங்கை வீரர்கள் 5 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர்.

இதில் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, திலான் சமரவீர, அரவிந்த டி சில்வா,திலகரத்ன டில்ஷான், அஞ்சலோ மெதிவ்ஸ், சனத் ஜயசூரிய, மார்வன் அத்தபத்து மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகிய வீரர்கள் இலங்கை சார்பாக டெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ஓட்டங்களைக் குவித்த வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், துரதிஷ்டவசமாக திமுத் கருணாரத்ன 119 ஓட்டங்களை எடுத்த போது ஆட்டமிழந்தார்.

முன்னதாக, பங்களாதேஷ் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் கன்னி இரட்டைச் சதமடித்து சாதனை படைத்த அவர், டெஸ்ட் போட்டியில் தனது அதிகபட்ச ஓட்டங்களையும் (244 ஓட்டங்கள்) பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, திமுத் கருணாரத்னவுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்காக மிகச் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்த லஹிரு திரிமான்ன, டெஸ்ட் போட்டிகளில் 2 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார். அத்துடன், தனது 3 ஆவது டெஸ்ட் சதத்தையும் அவர் பூர்த்தி செய்தார்.

கடந்த 6 இன்னிங்ஸ்களில் 4 அரைச் சதங்களுடன், 2 சதங்களை எடுத்து தனது அபார திறமையினை லஹிரு திரிமான்ன வெளிப்படுத்தியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.