November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொடரும் டெல்லியின் வெற்றிப் பயணம்

Photo:BCCI/IPL

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கெபிடெல்ஸ் அணியின் வெற்றிப் பயணம் தொடர்ந்த வண்ணமுள்ளது.

தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது.

டெல்லி கெபிடெல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ராஜஸ்தான் அணிக்கு தோல்வியே கிட்டியது.

சார்ஜாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய டெல்லி கெபிடெல்ஸ் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஸிகர் தவான், பிருத்திவ் ஷா, அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பாண்ட் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். டெல்லி அணி 9.2 ஓவர்களில் 79 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

எனினும், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் ஸிம்ரோன் ஹெட்மயர் ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அணியை சவாலான நிலைக்கு கொண்டுவந்தது. மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 4 சிக்ஸர்களுடன் 39 ஓட்டங்களையும், ஸிம்ரோன் ஹெட்மயர் 5 சிக்ஸர்களுடன் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

டெல்லி கெபிடெல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் ஜொப்ரா ஆச்சர் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

185 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியாலும் எதிர்பார்த்தளவு ஓட்டங்களைப் பெற முடியவில்லை. கடந்த ஆட்டத்தில் பிரகாசித்த ஜோஸ் பட்லர் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 24 ஓட்டங்களுடனும், சஞ்சு சம்சன் 5 ஓட்டங்களுடனும், யஸாவி ஜஸ்வால் 34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஏனைய வீரர்களாலும் ஓட்டங்களைப் பெற முடியவில்லை.

ராஜஸ்தான் அணி துடுப்பாட்டம் சுவாரயஸ்யமே இல்லாமல் மந்தமாக இருந்ததுடன் விக்கெட்டுகளும் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன். 19.4 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சகல விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன.

அதன்படி டெல்லி கெபிடெல்ஸ் அணி 46 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

கெகிஸோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை இலகுவாக்கினர். தனது ஆறாவது ஆட்டத்தில் விளையாடிய டெல்லி கெபிடெல்ஸ் அணி ஐந்தாவது வெற்றியைப் பதிவுசெய்து 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.