ஆடவருக்கான பத்தாயிரம் மீற்றர் மற்றும் மகளிருக்கான ஐயாயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளின் புதிய உலக சாதனைகள் நிலை நாட்டப்பட்டன.
ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா நகரில் துரியா ஸ்டேடியத்தில் இந்த தடகள ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன.
ஆடவருக்கான பத்தாயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியை உகண்டாவின் ஜோஸுவா செப்டெகெய் 26 நிமிடங்கள் 11 செக்கன்களில் பூர்த்தி செய்து உலக சாதனையை நிகழ்த்தினார்.
இதற்கு முன்னர் இந்த சாதனை எதியோப்பியாவின் கெனனிஸா பிகெல் வசமிருந்ததுடன் அவர் 15 வருடங்களுக்கு முன்பு பத்தாயிரம் மீற்றர் ஓட்டத்தை 26 நிமிடங்கள், 17 செக்கன்களில் நிறைவு செய்து உலக சாதனை படைத்திருந்தார்.
இது 24 வயதுடைய செப்டெகெய் கடந்த 10 மாதங்களில் நிலை நாட்டிய நான்காவது உலக சாதனையாகும்.
கடந்த வருடம் டிசம்பரில் 10 கிலோ மீற்றர் வீதி ஓட்டத்திலும்,பெப்ரவரியில் 5 கிலோ மீற்றர் வீதி ஓட்டப் போட்டியிலும் உலக சாதனை படைத்த செப்டெகெய் கடந்த ஓகஸ்டில் மொனாகோடயமன் லீக் மெய்வல்லுநர் போட்டிகளில் ஐயாயிரம் மீற்றர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்து உலகின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
இதேவேளை, வெலன்சியா ஓட்டப் போட்டிகளில் மகளிருக்கான ஐயாயிரம் மீற்றர் ஓட்டத்தில் எத்தியோப்பியாவின் லெட்சென்பெட் கிடே உலக சாதனையை நிலைநாட்டினார்.
22 வயதுடைய அவர் போட்டியை 14 நிமிடங்கள், 06 செக்கன்களில் நிறைவு செய்தார். இதற்கமைய 2008 ஆம் ஆண்டில் இந்தப் போட்டிப் பிரிவில் எத்தியோப்பியாவின் டிருனேஸ் டிபாபா நிகழ்த்திய உலக சாதனை 5 செக்கன்களால் முறியடிக்கப்பட்டது.
இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், இது தன்னுடைய நீண்ட நாள் கனவு என்றும் 22 வயதுடைய லெட்சென்பெட் கிடேபோட்டியின் பின்னர் தெரிவித்திருந்தார்.
அவர் கடந்த வருடம் டோஹாவில் நடைபெற்ற உலக சாம்பியன் ஸிப் மெய்வல்லுநர் போட்டிகளில் பத்தாயிரம் மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.