டென்னிஸ் அரங்கில் ஜாம்பவான்களாக முத்திரைப் பதித்துள்ள சேர்பியாவின் நொவெக் ஜோகோவிச்சும், ஸ்பெய்னின் ரபேல் நடாலும் பிரெஞ் ஓபனில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.
இது டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை தூண்டியுள்ளதுடன் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்நிலை வீரரான நொவெக் ஜோகோவிச் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் ஐந்தாம் நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் ட்ஸிபாஸை எதிர்கொண்டார்.
போட்டியில் முதலிரண்டு செட்களையும் 6-3, 6-2 எனும் செட்கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். எனினும், அடுத்த செட்டை 7-5 என ஸ்டெபனோஸ் ட்ஸிபாஸ் தன்வசப்படுத்த போட்டி மேலும் தாமதிக்க ஆரம்பித்தது.
3 மணித்தியாலங்களும் 54 நிமிடங்களும் நீடித்த இந்தப் போட்டியில் நான்காம் செட்டை 6-4 என தனதாக்கிய ஸ்டெபனோஸ் ட்ஸிபாஸை கடும் சவால் விடுத்தார்.
என்றாலும், தீர்மானமிக்க ஐந்தாம் செட்டில் மீண்டும் ஆற்றலை வெளிப்படுத்திய ஜோகோவிச் அந்த செட்டை 6-1 என இலகுவாகக் கைப்பற்றி வெற்றியை உறுதிசெய்தார்.
17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நொவெக் ஜோகோவிச் இரண்டாவது தடவையாக பிரெஞ்ச் ஓபனில் சாம்பியனாகும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார். இதற்கு முன்னர் அவர் 2016 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் ஆனார்.
இதேவேளை, நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான மற்றொரு அரைஇறுதிப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடாலும் ஆர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வெட்ஸ்மனும் பலப்பரீட்சை நடத்தினர்.
போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 6-3, 7-6 எனும் செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் 13 ஆவது தடவையாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியனாகும் எதிர்பார்ப்பு நடாலிடம் வலுப்பெற்றுள்ளது.
இதுவரை 18 டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரபேல் நடால் பிரெஞ்ச் ஓபனில் 2005 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 12 தடவைகள் சாம்பியனாகியுள்ளதுடன் (2009, 2015, 2016) கடந்த தசாப்தத்தில் மூன்று தடவைகள் மாத்திரமே அதனை தவறவிட்டுள்ளார்.
அந்த வகையில் டென்னிஸ் உலகில் ஜாம்பவான்களாக கருதப்படும் ரபேல் நடாலும், நொவெக் ஜோகோவிச்சும் ரோலண்ட் காரோஸில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளனர்.
இந்தப் போட்டி டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.