January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊழல் மோசடி விவகாரம்: இலங்கையின் முன்னாள் வீரர் நுவன் சொய்ஸாவுக்கு 6 வருடத் தடை

ஐ.சி.சி இன் மூன்று வகையான ஊழல் தடுப்பு விதிகளை மீறிய இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான நுவன் சொய்ஸாவுக்கு 6 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய சகல விதமான கிரிக்கெட்டிலிருந்தும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இவருக்கான தடைக்காலம் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ம் திகதியிலிருந்து கணிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற டி-10 லீக் தொடரில் விளையாடிய இலங்கை அணியின், பயிற்சியாளராக நுவன் சொய்ஸா செயற்பட்டிருந்தார். இதன்போது அவர் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.சி.சி இன் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து, ஐ.சி.சியினால் நியமிக்கப்பட்ட சுயாதீன நடுவர் தீர்ப்பாயத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகிய பின்னர் ஐ.சி.சி இன் பின்வரும் சட்ட விதிகளை மீறியமை நிரூபணமானது.

இதனையடுத்து அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதுடன், அவருக்கான தண்டனைகள் அறிவிக்கப்படும் என ஐ.சி.சி. குறிப்பிட்டிருந்தது. அதன்படி, தற்போது 6 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது.

நுவன் சொய்ஸா 1997ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடியதுடன், 30 டெஸ்ட், 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒட்டுமொத்தமாக 170 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

அதுமாத்திரமன்றி, இவர் கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.