பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இலங்கை குழாத்தில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கண்டி பல்லேகலையில் வெற்றி-தோல்வியின்றி முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியின்போது உபாதைக்குள்ளான வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவும்,வலைப் பயிற்சிகளின் போது உபாதைக்குள்ளான டில்ஷான் மதுஷங்கவும் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சாமிக்க கருணாரட்னவும், இடதுகை சுழல்பந்து வீச்சாளர் லக்ஷான் சந்தகேனும் குழாத்தில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை சார்பாக ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரம் விளையாடியுள்ள றோயல் கல்லூரியின் முன்னாள் வீரர் சாமிக்க கருணாரட்ன, இதுவரை 39 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
என்.சி.சி கழகத்துக்காக விளையாடி வருகின்ற இவர், இறுதியாக நடைபெற்ற உள்ளூர் முதல்தர ஒருநாள் போட்டியில் ராகம கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக பந்துவீச்சில் பிரகாசித்து அந்த அணிக்கு சம்பியன் பட்டம் வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
இதனிடையே, இலங்கை அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் மாத்திரம் தொடர்ந்து விளையாடி வருகின்ற லக்ஷான் சந்தகேன் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இறுதியாக 2018 இல் பல்லேகலை மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் லக்ஷான் சந்தகேன் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்களுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை(வியாழக்கிழமை) கண்டி பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.