
Photo: S.Thomas’ College facebook
கொழும்பு றோயல் கல்லூரிக்கும், கல்கிசை புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 142 ஆவது நீல வர்ணங்களின் சமர் (மாபெரும் கிரிக்கெட் போட்டி) கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டது.
இப்போட்டியில் விளையாடவிருந்த கல்கிசை புனித தோமஸ் கல்லூரியைச் சேர்ந்த சில வீரர்களுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நேர்மறையாக இருந்ததால் போட்டியை பிற்போட இரண்டு கல்லூரிகளினதும் ஏற்பாட்டுக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
இலங்கையில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்று வருகின்ற மிகவும் பழமையான கிரிக்கெட் தொடரான நீல வர்ணங்களின் சமர் கொரேனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் முதல் தடவையாக இரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக றோயல் – தோமஸ் கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக இப்போட்டியை கொழும்புக்கு வெளியே நடத்த ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்ததுடன், இதற்கான ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் கடந்த வாரம் நடைபெற்றது.
இதன்படி, இப் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை நடைபெறுவதாக இருந்தது.
நாட்டில் கொவிட் – 19 நிலைமை சீரான பின்னர் போட்டிக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.