July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னை சுப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத் தலைவர் சபாரத்தினம் காலமானார்

சென்னை சுப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவரும், இயக்குனருமான எல்.சபாரத்தினம் (80) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்,  உயிரிழந்தார். அவருக்கு இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். மனைவி காலமாகிவிட்டார்.

மறைந்த சபாரத்தினத்தின் உடல் அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு உட்பட்டு  சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

காரைக்குடியில் பிறந்த எல்.சபாரத்தினம், செட்டிநாடு சிமென்ட் கூட்டுறவு நிறுவனத்தின் செயல் இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றினார். கோரமண்டல் சுகர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஐ.சி.எல் நிதிச் சேவை நிறுவனம், ஐ.சி.எல் சிப்பிங் லிமிடெட், கோரமண்டல் இலத்திரனியல் நிறுவனம், ஐ.சி.எல் செக்யூரிட்டீஸ், பயோசிந்த் லைப் சயின்சஸ் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் இயக்குநர், இந்தியா சிமென்ட்ஸ் ஆலோசகர் என்று பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்து திறம்பட பணியாற்றியுள்ளார்.

பாரதிய வித்யாபவன் சென்னை கேந்திராவின் தலைவராகவும், டி.எஸ் நாராயணசாமி கலை, அறிவியல் கல்லூரியின் அறங்காவலராகவும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும், மத்திய கைலாஷ் கோயில் அறங்காவலராகவும், சென்னை இசை அகடமியின் புரவலராகவும், கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் தலைவர் என்று பல்வேறு கல்வி, கலை, கலாசார அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

சென்னை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனம், சிப்காட் என்று பொதுத்துறை, தமிழக அரசு நிறுவனங்களில் இயக்குநராகவும் அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.