January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திரிமான்ன, திமுத் இணைப்பாட்ட சாதனை: வலுவான நிலையில் இலங்கை அணி

Photo: srilanka cricket media

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸுக்காக 7 விக்கெட்டுகளை இழந்து 541 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 163 ஓட்டங்களையும், மொமினுல் ஹக் 127 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 90 ஓட்டங்களையும், முஸ்பிகுர் ரஹீம் 68 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 50 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால், தனஞ்சய டி சில்வா மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை  கைப்பற்றினர்.

இதன் பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 73 ஓவர்களை எதிர்கொண்டு 3 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோரின் சிறந்த பிரகாசிப்புடன் நிதானமாக துடுப்பெடுத்தாடி முதல் விக்கெட்டுக்காக 114 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர்.

இதன்படி, அடுத்தடுத்த இரண்டு இன்னிங்ஸ்களில் முதல் விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டத்தைப் பெற்றுக்கொண்ட ஆரம்ப ஜோடியாக புதிய சாதனை படைத்தனர்.

இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆரம்ப விக்கெட்டுக்காக 101 ஓட்டங்களை இவர்கள் பெற்றுக்கொண்டனர்.

முன்னதாக 2004 இல் சனத் ஜயசூரிய, மார்வன் அத்தபத்து ஜோடி ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்த இரண்டு இன்னிங்ஸ்களில் ஆரம்ப விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

இந்த நிலையில், துரதிஷ்டவசமாக தேநீர் இடைவேளை வழங்குவதற்கான இறுதிப்பந்தில் 58 ஓட்டங்களை பெற்றிருந்த லஹிரு திரிமான்ன ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த ஓசத பெர்னாண்டோ 20 ஓட்டங்களுடனும், அடுத்து களமிறங்கிய அஞ்செலோ மெதிவ்ஸ் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கிய தனன்ஜய டி சில்வா, திமுத் கருணாரத்னவுடன் இணைந்து இலங்கை அணிக்காக மற்றுமொரு சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தார்.

இதன்படி,  ஆட்டநேர இறுதிவரை இவர்கள் இருவரும் துடுப்பெடுத்தாடியதுடன், திமுத் கருணாரத்ன 85 ஓட்டங்களையும், தனன்ஜய டி சில்வா 26 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

இதில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன உலக சாதனையொன்றை நிலைநாட்டினார். உலக டெஸ்ட் அரங்கில் கடந்த 5 வருடங்களில் அதிக ஓட்டங்களைக் குவித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அவர் சாதனை படைத்தார்.

குறித்த காலப்பகுதியில் 7 சதங்களுடன் 3,114 ஓட்டங்களைக் குவித்து திமுத் கருணாரத்ன முதலிடத்தையும், தென்னாபிரிக்காவின் டீன் எல்கர் 5 சதங்களுடன் 3011 ஓட்டங்களைக் குவித்து இரண்டாவது இடத்தையும், அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர், 8 சதங்களுடன் 2794 ஓட்டங்களைக் குவித்து மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் தாஜூல் இஸ்லாம், மெஹிடி ஹாசன் மற்றும் டஸ்கின் அஹ்மட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த நிலையில், பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட இலக்கை சமப்படுத்த இலங்கை அணிக்கு இன்னும் 312 ஓட்டங்கள் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.