Photo: BCCI
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் விராத் கோலி அரைச்சதம் விளாசியதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் 6000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
தேவ்தத் படிக்கலின் அபாரமான சதம், அணித் தலைவர் விராத் கோலியின் அரைச் சதம் ஆகியவற்றால் மும்பையில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 16 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி கொண்டது.
இதில் விராட் கோலி 47 பந்துகளில் 72 ஓட்டங்களையும், தேவ்தத் படிக்கல் 52 பந்துகளில் 101 ஓட்டங்களையும் குவித்து அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
அத்துடன், விராட் கோலி அரைச் சதம் அடித்ததன் மூலம் ஐ.பி.எல். தொடரில் 6000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
ஐ.பி.எல் தொடரில் முதல் முறையாக 4 ஆயிரம், 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலி தற்போது 6 ஆயிரத்தை தொட்டு புதிய சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
இதன்படி, ஐ.பி.எல் தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களில் 6,021 ஓட்டங்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார். இதில் 40 அரைச் சதங்கள், 5 சதங்கள் உள்ளடங்கும்.
அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சுரேஷ் ரெய்னா 5,448 ஓட்டங்களையும், 3ஆவது இடத்தில் ஷிகர் தவான் 5,428 ஓட்டங்களையும், 4 ஆவது இடத்தில் டேவிட் வோர்னர் 5,384 ஓட்டங்களையும், 5ஆவது இடத்தில் ரோகித் சர்மா 5,368 ஓட்டங்களையும் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.