July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஐ.பி.எல் போட்டியிலிருந்து விலகுவது வருத்தமாக உள்ளது”; நடராஜன்

Photo: BCCI

முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் ஐ.பி.எல் போட்டியிலிருந்து விலகுவதாக சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் தெரிவித்துள்ளார்.

டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன், முதல் 2 போட்டிகளில் களமிறங்கினாலும், அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில் விளையாடவில்லை.

இந்த நிலையில், முழங்கால் உபாதை காரணமாக ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலகுவதாக ஹைதராபாத் அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது இவ்வாறிருக்க, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல் போட்டியிலிருந்து விலகுவதை அதிகாரபூர்வமாக நடராஜன் அறிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவில் அவர் கூறியதாவது:

‘இந்த வருட ஐ.பி.எல் போட்டியிலிருந்து முழுவதுமாக விலகுகிறேன். மிகவும் கவலையாக உள்ளது. கடந்த வருடம் நன்றாக விளையாடினேன். இந்த வருட ஐ.பி.எல் போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் எதிர்பார்ப்புடன் இருந்தேன். முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டியுள்ளது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. என்ன சொல்வதென்று தெரியவில்லை. மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது.

இனிவரும் எல்லா போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெல்லவேண்டும் என வாழ்த்துகிறேன்’ என தெரிவித்தார்.

எனவே, நடராஜன் உபாதை காரணமாக விலகுவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மட்டுமல்லாது அவருக்கும் பின்னடைவாகவே அமையவுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் யோர்க்கர் பந்துவீச்சில் கலக்கி இந்திய அணியிலும் இடம்பிடித்த நடராஜனுக்கு இந்த சீசன் மிகுந்த ஏமாற்றமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமின்றி, எதிர்வரும் அக்டோபர் , நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள டி-20 உலக கிண்ணப் போட்டியில் நடராஜனுக்கு தன்னை நிரூபிக்க சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது.

இதில் இந்திய டி-20 அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரை அடுத்து 3 ஆவது வேகப்பந்து வீச்சாளராக இடம்பிடிக்க அருமையான வாய்ப்பு நடராஜனுக்கு காணப்பட்டது.

ஏனெனில், அவுஸ்திரேலிய தொடரில் அறிமுகமானதிலிருந்து டி-20 போட்டிகளிலும் அவுஸ்திரேலிய மண்ணில் நடராஜன் அற்புதமாக ஜொலித்திருந்தார்.

ஆனாலும், தற்போதைய நிலையில் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரை விடுத்து, சென்னை அணியின் தீபக் சஹார், விராட் கோஹ்லியின் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடும் மொஹமட் சிராஜ் ஆகியோர் அற்புதமாக தமது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆகவே, இவர்களை பின்தள்ளி இந்திய உலக கிண்ண அணியில் இடம்பிடிக்க முடியுமாக இருந்தால், நடராஜன் ஐ.பி.எல் போட்டிகளில் ஜொலிக்க வேண்டிய கட்டாய நிலைமை ஒன்று காணப்பட்டது.

அப்படியான இக்கட்டான நிலைமைக்கு மத்தியில் நடராஜனுக்கு ஏற்பட்ட முழங்கால் உபாதை என்பது மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.