November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையுடனான முதலாவது டெஸ்ட்; 500 ஓட்டங்களை நெருங்கும் பங்களாதேஷ் அணி

Photo: Srilanka Cricket

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 474 ஓட்டங்களை குவித்துள்ளது.

கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்தப்போட்டியின், முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 302 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பங்களாதேஷ் அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

முதல் நாள் ஆட்டத்தில் தனது கன்னி டெஸ்ட் சதத்தை கடந்திருந்த நஜ்முல் ஹொசைன் சென்டோ மற்றும் அரைச்சதம் கடந்திருந்த அணித்தலைவர் மொமினுல் ஹக் ஆகிய இருவரும் மதியபோசனை இடைவேளை வரை சிறப்பாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தனர்.

இதில்,  மதியபோசன இடைவேளையின் போது, நஜ்முல் ஹொசைன் சென்டோ 150 ஓட்டங்களை கடக்க, மொமினுல் ஹக் சதத்தைப் பதிவு செய்தார்.

எனினும், லஹிரு குமாரவின் பந்து வீச்சில் நஜ்முல் ஹொசைன் சென்டோ 163 ஓட்டங்களை எடுத்து ஆட்டடமிழக்க, மொமினுல் ஹக், தனன்ஜய டி சில்வாவின் பந்துவீச்சில் 127 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இருப்பினும், இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 242 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தனர்.

அத்துடன், பங்களாதேஷ் அணிக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் கன்னி சதமடித்து 150 ஓட்டங்களை எடுத்த இரண்டாவது வீரராக நஜ்முல் ஹொசைன் சென்டோ இடம்பிடித்தார்.

இதேநேரம், டெஸ்ட் அறிமுகத்தை பெற்று 8 வருடங்களுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் முதல் சதமடித்த மொமினுல் ஹக், அணித் தலைவராக 3 ஆவது சதத்தையும், இலங்கை அணிக்கெதிராக 4 ஆவது சதத்தையும் பெற்றுக்கொண்டார்.

இந்த இரண்டு வீரர்களினதும் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய முஸ்பிகுர் ரஹீம் மற்றும் லிடன் டாஸ் ஆகியோர் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் துடுப்பெடுத்தாட, தேநீர் இடைவேளையின் போது, பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 440 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் போட்டியை தொடர முடியாமல் போனதுடன், போதியளவு வெளிச்சமின்மை காரணமாக இரண்டாவது நாளுக்கான ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நடுவர்கள் தீர்மானித்தனர்.

இதன்படி, இரண்டாம் நாள் ஆட்டநேர நிறைவின் போது, பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 474 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

முஸ்பிகுர் ரஹீம் 43 ஓட்டங்களையும், லிடன் டாஸ் 25 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணி டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில், இலங்கையில் வைத்து பெற்றுக்கொண்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டமாக இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2013ம் ஆண்டு காலி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 638 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.