July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் ஓட்டங்களை எட்டி சாதனை படைத்தார் பஞ்சாப் அணியின் தலைவர் கே.எல்.ராகுல்

Photo: BCCI

டி-20 போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் கே.எல். ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் ஏமாற்றிய பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன்மூலம் இம்முறை போட்டிகளில் அந்த அணி ஹெட்ரிக் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களை எடுத்தது.

இதில் பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கே.எல். ராகுல் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

ஆயினும், குறித்த போட்டியில் டி-20 போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 5 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த இரண்டாவது வீரராக அவர் புதிய சாதனை படைத்தார்.

அத்துடன், விராட் கோஹ்லியின் முந்தைய சாதனையை ராகுல் முறியடித்துள்ளார். விராட் கோலி 162 போட்டிகளில் விளையாடி தனது அதிவேக 5000 ஓட்டங்கள் சாதனையை எட்டியுள்ள நிலையில், தற்போது கே.எல் ராகுல் 143 டி-20 போட்டிகளிலேயே அதை முறியடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் 132 போட்டிகளில் 5 ஆயிரம் ஓட்டங்கள் மைல்கல்லை எட்டி முதலிடத்தில் இருக்க, அவுஸ்திரேலியாவின் ஷேன் மார்ஷ் 144 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி 3 ஆவது இடத்தில் உள்ளார்.

அத்துடன், டி-20 அரங்கில் 5000 ஓட்டங்களை அதிவேகமாக கடந்த இந்திய வீரர்களில் விராத் கோலி (167), சுரேஷ் ரெய்னா (173) ஆகிய இருவரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதனிடையே, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் கே.எல். ராகுல் டி-20 போட்டிகளில் முன்னணி வீரராக விளங்கி வருகிறார். ஐ.சி.சி இன் டி-20 போட்டிகளின் தரவரிசையில் அண்மைக்காலமாக முதல் 10 இடங்களில் அவர் இடம் பெற்றுவருகிறார். இதேபோல, ஐ.பி.எல் போட்டிகளிலும் அவர் சிறப்பான வீரராகவும், தலைவராகவும் விளங்கி வருகிறார்.

கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய கே.எல் ராகுல், 14 போட்டிகளில் விளையாடி 670 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களுக்கு வழங்கப்படுகின்ற Orange தொப்பியைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து இம்முறை ஐ.பி.எல் சீசனிலும் அவர் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 2 அரைச் சதங்களை அடித்துள்ளார். இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக 91 ஓட்டங்களைக் குவித்து 9 ஓட்டங்களில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.