January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல்: கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது சென்னை சுப்பர் கிங்ஸ்

Photo: CSK Twitter

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐ.பி.எல் தொடரின் புள்ளிகள் பட்டியலில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி `முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

தீபர் சஹரின் அற்புதமான பந்துவீச்சு, பாப் டூ ப்ளெசிஸ், ருதுராஜ் கெய்வாட்டின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால், மும்பையில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ஓட்டங்களினால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்தது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதன்படி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், பாப் டூ பிளெசிஸ் ஆகியோர் களமிறங்கினர்.

கடந்த மூன்று போட்டியில் ஏமாற்றிய ருதுராஜ், இம்முறை சுதாரித்துக் கொண்டார். இத்தொடரில் முதல் மற்றும் ஐ.பி.எல் அரங்கில் நான்காவது அரைச் சதம் கடந்தார்.

இதில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 115 ஓட்டங்களை எடுத்திருந்தபோது ருதுராஜ் 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மொயின் அலி முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டிய நிலையில், 12 பந்துகளில் 25 ஓட்டங்களை அடித்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து 4ஆவது இலக்கத்தில் டோனி களமிறங்கி, டூ பிளெசிஸுடன் இணைந்து ஓட்டங்களைக் குவித்தார். இதில் டோனி 17 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்த போதும், மறுமுனையில் டூ பிளெசிஸ் அதிரடியாக விளையாடி 95 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்தார். இறுதியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களை குவித்தது.

இதனையடுத்து 221 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவர்களில் 202 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 18 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

போட்டியின் 6ஆவது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 31 ஓட்டங்களை எடுத்து கொல்கத்தா அணி தடுமாறியது.

எனினும், தினேஷ் கார்த்திக், அண்ட்ரே ரசல் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 81 ஓட்டங்களை பகிர்ந்து போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தினர்.

அண்ட்ரே ரசல் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 54 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 40 ஓட்டங்களையும் குவித்தனர்.

அதன் பின்னர் தனி ஒருவராக போராடிய பெட் கமின்ஸ் 34 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 66 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

சென்னை அணியின் பந்துவீச்சில் திப்பக் சஹார் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், லுங்கி நிகிடி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இதன்படி, பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளை வீழ்த்தி, இத்தொடரில் சென்னை அணி ஹெட்ரிக் வெற்றி பெற்றது.

இதனிடையே, ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 15 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், ஐ.பி.எல் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை 4 போட்டிகளில் ஒரு தோல்வி, 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 போட்டிகளில் விளையாடி 3-லும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளது. 3 வெற்றிகள், ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மூன்றாம் இடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள், 2 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று நடப்புச் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 4ஆம் இடத்தில் உள்ளது.