இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நஜ்முல் ஹுசைன் சென்டோ கன்னி சதமடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பங்களாதேஷ் அணி 300 ஓட்டங்களை கடந்தது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய முதலாவது டெஸ்ட் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
நாணய சுழற்சிக்கு அமைய முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சயீப் ஹசன் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
எனினும், இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த தமிம் இக்பால் மற்றும் நஜ்முல் ஹுசைன் சென்டோ ஜோடி இலங்கை பந்து வீச்சை எளிதாக சமாளித்தது.
பொறுப்பாக விளையாடிய தமிம் இக்பால் அரைச் சதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 144 ஓட்டங்களை இணைப்பாட்டமாக எடுத்தபோது தமிம் இக்பால் 90 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சென்டோவும், அணித் தலைவர் மொமினுள் ஹக்கும் ஜோடி சேர்ந்து பிரிக்கப்படாத 3 ஆவது விக்கெட்டுக்காக 150 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.
அபாரமாக துடுப்பெடுத்தாடிய சென்டோ, 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் 126 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், மொமினுள் ஹக் 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார்.
தனது 7ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சென்டோ தனது கன்னிச் சதத்தை பெற்றார்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டு களை வீழ்த்தினார்.
இதன்படி, முதலாம் நாள் ஆட்டநேர நிறைவில் பங்களாதேஷ் அணி பலமான ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்து, இலங்கை அணிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.