January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ரோகித் சர்மாவுக்கு அபராதம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவர் ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவரது போட்டிக்கட்டணத்திலிருந்து 12 இலட்சம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமித் மிஸ்ராவின் மாயஜால சுழல்பந்து வீச்சால் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் டி 20 போட்டியின் 13 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றது.

இந்தப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட ரோகித் சர்மா, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், பந்து  வீசத்தவறிய குற்றச்சாட்டுக்காக அபராதத்தை எதிர்நோக்கியுள்ளார்.

ரோகித் சர்மா தன்னுடைய போட்டிக்கட்டணத்தில் 50 சதவீதத்தை (12 இலட்சம் ரூபா) அபராத தொகையாக வழங்கியுள்ளார். எவ்வாறாயினும், இந்தப்போட்டியின் இரண்டாவது பாதியில் ரோஹித் சர்மா மைதானத்திலிருந்து வெளியேறிய நிலையில், கீரன் பொல்லார்ட் அணித்தலைவராக செயற்பட்டிருந்தார்.

ஆயினும் தலைவர் பதவியில் ரோகித் சர்மா செயற்பட்டதால் அவருக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். விதிமுறையின் படி, முதல் முறையாக இந்த குற்றச்சாட்டுக்கு முகங்கொடுக்கும் போது, அணித்தலைவருக்கு 12 இலட்சம் அபராதமாக விதிக்கப்படும்.

இரண்டாவது முறையும் இதே தவறு விடப்படும் நிலையில், அணித்தலைவருக்கு 24 இலட்சமும், வீரர்களுக்கு 6 இலட்சமும் அபராதமாக விதிக்கப்படும். ஒரே பருவகாலத்தில் மூன்றாவது முறையாக இந்த தவறு இடம்பெற்றால், அணித்தலைவருக்கு 30 இலட்சமும், வீரர்களுக்கு 12 இலட்சமும் அபராத தொகையாக நிர்ணயிக்கப்படும்.

இதேவேளை, இம்முறை ஐ.பி.எல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், பந்து வீசத்தவறிய குற்றச்சாட்டில் சென்னை அணித் தலைவர் எம்.எஸ் டோனிக்கும் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.