November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்த இசுரு குமார

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றுவரும் ஆசிய சிரேஷ்ட பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்குகொண்ட இலங்கை வீரர் டிலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதனிடையே, குறித்த போட்டியில் க்ளீன் ஜேர்க் முறையில் (Clean & Jerk) வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆசிய பளுதூக்கல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியாக ஆசிய சிரேஷ்ட பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 18 ஆம் திகதி உஸ்பெகிஸ்தானின் தஸ்கென் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது.

இந்தப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்திக்க திசாநாயக்க (73 கி.கி எடைப்பிரிவு), டிலங்க இசுரு குமார (55 கி.கி. எடைப்பிரிவு), திலங்க பலகசிங்க (61 கி.கி. எடைப் பிரிவு), சத்துரிக்கா ப்ரியந்தி (81 கி.கி. எடைப்பிரிவு) ஆகிய நான்கு வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.

இந்த நிலையில், போட்டிகளின் முதல்நாளான நேற்று (18) நடைபெற்ற ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைப்பிரிவு பளுதூக்கலில் டிலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதில் க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 137 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், ஒட்டுமொத்தமாக 241 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன்படி, ஆசிய சிரேஷ்ட பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டிகள் வரலாற்றில் வீரர் ஒருவரினால் ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் சந்தர்ப்பமாக இது பதிவானது.

முன்னதாக, 2019இல் சீனாவில் நடைபெற்ற சிரேஷ்ட வீரர்களுக்கான ஆசிய பளுதூக்கல் போட்டியில் 55 கிலோ கிராம் எடைப் பிரிவுக்கு குறைவான போட்டியில் களமிறங்கி இசுரு குமார வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இசுறு குமார பெற்றுக்கொண்ட இந்த வெற்றியானது ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை வீரரொருவர் பெற்றுக்கொண்ட முதலாவது பதக்கமாகவும் வரலாற்றில் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு பதக்கங்களை வென்ற வீரராகவும் இசுரு குமார புதிய சாதனை படைத்தார்.

இசுரு குமார குருநாகல் சென். ஜோன் கொத்தலாவல கல்லூரி மற்றும் கெட்டுவான மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

இதேவேளை, குறித்த போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை உஸ்பகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.