February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உணவகமொன்றில் சண்டையில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

தென் மாகாணம், மாத்தறையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் மோதலில் ஈடுபட்டதாக வெளியான ஊடக செய்தி தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முகாமைத்துவக் குழு வீரர்களின் ஒழுக்கம் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருவதை வலியுறுத்த விரும்புகிறது. மேலும், கிரிக்கெட் விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் உரிய வீரருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

அதேபோல, இந்த விசாரணையின் நோக்கம் உண்மையை வெளிப்படுத்துவதே ஆகும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடொன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைக்கு இதுவரை கிடைக்காவிட்டாலும், ஊடகங்கள் வாயிலாக வெளியாகிய செய்தி குறித்து விசாரணை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வீரர் இலங்கை அணிக்காக விளையாடி வரும் இடதுகை துடுப்பாட்ட வீரர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.