Photo: BCCI
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் அரைச் சதம் கடந்ததன் மூலம் மிக மோசமான சாதனையை கிளென் மெக்ஸ்வெல் படைத்துள்ளார்.
சபாஸ் அஹமட்டின் அற்புதமான பந்துவீச்சு, கிளென் மெக்ஸ்வெல்லின் அரைச் சதம் ஆகியவற்றால் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 6ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் விராத் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றது.
குறித்த போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த கிளென் மெக்ஸ்வெல், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டிகளில் அரைச் சதமடித்து அசத்தினார்.
அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிளென் மெக்ஸ்வெல் தனது ஆரம்ப போட்டிகளில் இருந்து தற்போது வரை பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வருகிறார்.
ஆனால், ஐ.பி.எல் போட்டிகளில் இவர் கடந்த சில ஆண்டுகளாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2017 ஐ.பி.எல் சீசனுக்குப் பிறகு மெக்ஸ்வெல் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் நிரந்தர இடம்பிடித்த இவர் இந்த ஆண்டில் அந்த அணியால் நிராகரிக்கப்பட்டார். காரணம், இவர் சென்ற ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி வெறும் 108 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். பல கோடிகளுக்கு ஏலத்தில் எடுத்து இவ்வளவு குறைவாக ஓட்டங்களை எடுத்து அந்த அணிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தினார்.
இருந்தாலும், கிளென் மெக்ஸ்வெல்லை வாங்குவதற்கு ஐ.பி.எல் அணிகள் போட்டி போட்டன. நடப்பு ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் கூட மெக்ஸ்வெல்லை ஒப்பந்தம் செய்ய சென்னை சுப்பர் கிங்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் கடும் போட்டி போட்டன.
இறுதியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14.25 கோடி ரூபாய்க்கு மெக்ஸ்வெல்லை வாங்கியது. இது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.
இந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது லீக் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் 100 மீட்டருக்கு ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை விளாசி Maxwell is Back என சொல்லாமல் சொன்னார்.
அந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய மெக்ஸ்வெல் 39 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கோலி 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஏபி டிவில்லியர்ஸ் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சில் RCB வீரர்கள் ஒரு பக்கம் விக்கெட்டுகளை பறிகொடுக்க கிளென் மெக்ஸ்வெல் மாத்திரம் தனியாளாக போராடினார்.
கடைசி பந்துவரை களத்தில் இருந்த மெக்ஸ்வெல் 59 ஓட்டங்களை விளாசினார். இம்முறை ஐ.பி.எல் தொடரில் தனது முதல் அரைச் சதத்தைப் பதிவு செய்தார்.
2016ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அரைச் சதம் அடித்திருந்தார்.
கடந்த 40 ஐ.பி.எல் போட்டிகளில் மெக்ஸ்வெல் அரைச் சதம் அடிக்கவில்லை. இது மிக மோசமான சாதனையாகும். இந்த மோசமான சாதனையைச் செய்த வீரர்களுக்கான பட்டியலில் கிளென் மெக்ஸ்வெல் நான்காவது இடத்தில் உள்ளார்.
இதில் முதல் இடத்தில் இருப்பவர் யூசுப் பதான். இவர் 49 போட்டிகளில் தொடர்ச்சியாக அரைச் சதம் அடிக்கவில்லை. 2010 முதல் 2013 வரை இவர் அரைச் சதம் அடிக்கவில்லை. இரண்டாம் இடத்தில் இருப்பவர் தீபக் ஹூடா. இவர் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 48 போட்டிகளில் விளையாடினாலும் அரைச் சதம் அடிக்கவில்லை.
சென்னை அணியின் டுவைன் பிராவோ மூன்றாம் இடத்தில் இருக்கிறார். இவர் 44 போட்டிகளில் அரைச் சதம் அடிக்கவில்லை.
எனவே. சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல் போட்டிகளில் அரைச் சதமடித்து கிளென் மெக்ஸ்வெல் மோசமான சாதனையிலிருந்து மீண்டார்
குறிப்பாக, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் கிளென் மெக்ஸ்வெல் விளையாடவில்லை. குறிப்பாக கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் மெக்ஸ்வெல் ஒரு சிக்ஸரை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறாயினும், கிளென் மெக்ஸ்வெல்லுக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டம் என்றால் அது 2014 ஆம் ஆண்டு தான். அந்த சீசனில் தான் 552 ஓட்டங்களை அவர் விளாசினார்.