January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகல்

Photo: BCCI

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ்  விலகியுள்ளார்.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக  நடைபெற்ற லீக் போட்டியின்போது, ஒரு பிடியெடுப்பை எடுக்க முயன்றபோது அவருக்கு இடது கையில் அடிபட்டது. அதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

அதனையடுத்து, ஐ.பி.எல் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அறிவித்துள்ளது.

பென் ஸ்டோக்ஸின் காயம் தொடர்பில் ராஜஸ்தான் அணி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கடந்த போட்டியில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தொடரிலிருந்து விலகுகிறார். அவர், தொடர்ந்து ராஜஸ்தான் அணியுடன் இணைந்து இருப்பார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதேபோல், ஒரு ஓவர் பந்துவீசி 12 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, உலகின் முன்னணி சகலதுறை வீரர்களில் ஒருவராக திகழும் பென் ஸ்டோக்ஸ் அணியிலிருந்து விலகியது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு பின்னடைவாக  பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, ராஜஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சரும் காயம் காரணமாக விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும், பென் ஸ்டோக்ஸ், ஜொப்ரா ஆர்ச்சர் இல்லாத நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெளிநாட்டு வீரர்களாக லிவிங்ஸ்டன், ஆன்ட்ரூ டை, முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர். இவர்கள் மூவருமே பந்து வீச்சாளர்களாக உள்ளனர். டேவிட் மில்லர் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் உள்ளார்.