
file photo: Twitter/ KKR
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்தித்த எதிர்பாராத தோல்விக்கு, அந்த அணியின் உரிமையாளர் ஷாருக் கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 5 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் (56), ரோஹித் சர்மா (43) ஆகிய இருவரும் சிறப்பாகச் செயல்பட்டு ஓட்டங்களைக் குவித்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை எடுத்தது.
பந்துவீச்சில் ஆண்ட்ரூ ரஸ்ஸல் 5 விக்கெட்களை கைப்பற்றி, அசத்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிதிஷ் ராணா (57), ஷுப்மன் கில் (33) ஆகிய இருவரும் மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்களை எடுத்தனர். மற்றவர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்ததால், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்றது.
குறிப்பாக, கொல்கத்தா அணி வெற்றிபெற 28 பந்துகளில் 31 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரூ ரஸ்ஸல் 15 பந்துகளில் 9 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 11 பந்துகளில் 8 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.
கொல்கத்தா அணியின் தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. எனவே, இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படுமோசமாக சொதப்பி, வெற்றிபெற வேண்டிய போட்டியைக் கோட்டைவிட்டது.
Disappointing performance. to say the least @KKRiders apologies to all the fans!
— Shah Rukh Khan (@iamsrk) April 13, 2021
இது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக் கான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஷாருக் கான் வெளியிட்ட பதிவில், “வீரர்கள் விளையாடிய விதம் ஏமாற்றமளிக்கிறது. குறைந்தபட்சமாக சொல்ல வேண்டுமென்றால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.