Photo: BCCI
கடினமான சூழல்தான் ஒருவரைப் பக்குவப்படுத்துகிறது, செதுக்குகிறது, மனதிலும், உடலிலும் வைராக்கியத்தை விதைக்கிறது. இவை அனைத்தும் தமிழக வீரர், சின்னப்பம்பட்டி தங்கராசு நடராஜனுக்கு பொருந்தும்.
டென்னிஸ் பந்தில் பயிற்சி, வறுமையான சூழல், கடினமான முயற்சிகளுக்குப் பின்புதான் TNPL, ஐ.பி.எல், இந்திய அணியில் தனக்கான அடையாளத்தை நடராஜன் பதித்தார்.
நடராஜனைப் போன்றே அதே கடினமான சூழலில் இருந்து வந்து ஒரே போட்டியில் யார் இந்த வேகப்பந்துவீச்சாளர் என அனைவரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சக்காரியா.
ராஜஸ்தான் அணியின் முதல் லீக் போட்டியில் சேத்தன் சக்காரியா களமிறங்கி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசினார். முதல் ஐ.பி.எல் போட்டியிலேயே பலரது கவனத்தை பெற்ற சேத்தன் சக்காரியா கடந்து வந்த பாதை குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
யார் இந்த சேத்தன் சக்காரியா?
குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரிலிருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள பாவ்நகரில் உள்ள வார்தேஜ் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர்தான் சேத்தன் சக்காரியா. ஏழ்மையான குடும்பம். இவருடைய தந்தை லாரி சாரதி. அவரது வருமானத்தில் தான் குடும்பம் இயங்கி வந்துள்ளது. வறுமையிலும், ஏழ்மையிலும்தான் தனது கிரிக்கெட் கனவை சக்காரியா பூர்த்தி செய்தார்.
இதனிடையே, 16 வயது வரை டென்னிஸ் பந்தில் மட்டுமே கிரிக்கெட் விளையாடியவர் சேத்தன் சக்காரியா.
ஆரம்பத்தில் முன்னணி துடுப்பாட்ட வீரராக வர வேண்டும் என்ற கனவோடு இருந்த இவர், அதன்பிறகு வேகப்பந்து வீச்சாளர் அவதாரம் எடுத்தார். அதன்பிறகு, முறையான பயிற்சிகளோடு கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 2018ஆம் ஆண்டில் சௌராஷ்ட்ரா அணிக்கு விளையாட தேர்வாகியிருக்கிறார்.
இதுவரை 15 ரஞ்சி போட்டிகளில் விளையாடியிருக்கும் சக்காரியா, 41 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
நடராஜனைப் போல…
சக்காரியா தரம் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே இவரின் வேகப்பந்து வீச்சு மாணவர்களை ஈர்த்துள்ளது. வறுமையில் வாடிய சக்காரியாவுக்கு முறையான பயிற்சியும் இல்லை, பயிற்சியாளர்களும் இல்லை. 16 வயது வரை சக்காரியா டென்னிஸ் பந்தில்தான் பந்துவீசி பயிற்சி எடுத்தார்.கிரிக்கெட் தொடர்பான இணைய தளங்களைப் பார்த்து சுயமாக பயிற்சி எடுத்தார்.
சக்காரியா பலமே அவரின் ஸ்விங் பந்துவீச்சும், லைன்-லென்த்தில் வீசுவதும்தான். சராசரியாக 130 கி.மீ. வேகத்தில் பந்து வீசி வரும் சக்காரியாவுக்கு முறையான பயிற்சி இருந்தால் வேகத்தை அதிகப்படுத்தவும் முடியும். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத்கான் பாணியில் சேத்தன் சக்காரியா பந்து வீசி வருகிறார்.
அடையாளம் கண்டது எப்படி?
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கூச்பெஹர் கிரிக்கெட் போட்டியில் சக்காரியா 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கர்நாடக அணிக்கு எதிராக 84 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்துதான் சக்காரியா அடையாளம் காணப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு, அவுஸ்திரேலிய நட்சத்திரம் கிளென் மெக்ராத்தின் MRF BASE பவுண்டேஷனில் பயிற்சி பெற ஆரம்பித்தார்.
உள்ளூர் கிரிக்கெட்
2018-2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கிண்ணத் தொடரில் சௌராஷ்டிரா அணிக்காக அறிமுகமாகி விளையாடினார். இதுவரை 15 முதல்தரப் போட்டிகள், 7 லிஸ்ட் ஏ போட்டிகள், 16 டி20 போட்டிகளிலும் சக்காரியா பங்கேற்றுள்ளார்.
2020 ஆம் ஆண்டு ரஞ்சிக் கிண்ணத்தை வென்ற சௌராஷ்டிரா அணியில் சேத்தன் சக்காரியா இடம்பெற்றிருந்தார். அத்துடன், அண்மையில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி-20 தொடரில் 5 போட்டிகளில் பங்கேற்று 4.90 சராசரியுடன் 12 விக்கெட்டு களைக் கைப்பற்றினார். இதனால்தான், ஐ.பி.எல் மினி ஏலத்தின்போது இவரை ஏலம் எடுக்க பல அணிகள் முன்வந்தன.
ஐ.பி.எல் அனுபவம்
இடதுகை வேகப் பந்து வீச்சாளராக சிறப்பாக வீசுவதால் கடந்த ஐ.பி.எல் சீசனில் சக்காரியாவை வலைப் பயிற்சி பந்து வீச்சாளராக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி துபாய்க்கு அழைத்து சென்றிருந்தது.
இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் இவருக்கு அடிப்படை விலையாக 20 இலட்சம் ரூபா நிர்ணயிக்கப்பட்டதுடன், இவரை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 1.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.
முதல் ஐ.பி.எல் போட்டி
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நடைபெற்ற 4 ஆவது லீக் ஆட்டம் தான் சேத்தன் சக்காரியாவுக்கு முதல் போட்டி.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஆகியோர் அபாரமாக விளையாட, சக்காரியா பவர் ப்ளே ஓவராகட்டும் கடைசி ஓவராகட்டும் கச்சிதமாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்தார்.
பவர் ப்ளேயில் மயங்க் அகர்வாலின் விக்கெட்டை எடுத்தார். இறுதி ஓவரில் கே.எல்.ராகுல், ரிச்சர்ட்ஸன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் 17ஆவது ஓவரில் 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த சக்காரியா, 20ஆவது ஓவரில் 5 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இறுதியில் 4 ஓவர்கள் வீசிய சேத்தன் சக்காரியா 31 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரது பாராட்டையும் பெற்றுக்கொண்டார்.
தம்பியின் திடீர் தற்கொலை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சக்காரியாவின் சகோதரர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். எனினும், சகோதரனின் மரணம் கூட 10 நாட்களுக்கு பிறகுதான் சக்காரியாவுக்கு தெரிய வந்துள்ளது.
ஏனெனில், சேத்தன் சக்காரியா, சையத் முஷ்டாக் அலி டி-20 தொடரில் விளையாடிக் கொண்டிருந்ததால் அவரது கிரிக்கெட்டை பாதிக்கும் என குடும்பத்தினர் தகவல் தெரிவிக்கவில்லை.
எது எவ்வாறாயினும், தம்பியின் மரணம் சக்காரியாவை பெரிதும் பாதித்துள்ளது. சில நாட்கள் வீட்டில் யாரிடமும் அவர் பேசவில்லை. தனிமையில் இருந்துள்ளார். தீவிர மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டு கிரிக்கெட் களத்துக்கு திரும்பியுள்ளார். தம்பி மரணமடைந்து ஒருமாதம் கழித்து நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் இவர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தன்னுடைய தம்பியின் மரணம் குறித்து சேத்தன் சக்காரியா தெரிவிக்கையில்,
என்னுடைய தம்பி கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டான். நான் அப்போது வீட்டில் இல்லை. சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடிக்கொண்டிருந்தேன். நான் திரும்ப என்னுடைய வீட்டுக்கு செல்லும்வரை என்னுடைய தம்பியின் மரணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
என்னுடைய குடும்பத்தினர் தம்பி இறந்ததை என்னிடம் கூறவில்லை. நான் போன் செய்யும் போது எல்லாம் தம்பி எங்கே என்று கேட்பேன். ஏதாவது ஒரு காரணம் கூறுவார்கள். வெளிய போய் இருக்கான், பொருட்கள் வாங்க கடைக்கு போயிருக்கான் என்பார்கள். அவன் மட்டும் இப்போது இருந்திருந்தால் என்னை விட மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருப்பான் என சில மாதங்களுக்கு முன்பு சேத்தன் சக்காரியா கூறியிருந்தார்.
வறுமையில் சேத்தன்
சேத்தன் சக்காரியாவின் குடும்பம் வறுமையில் இருந்ததால், அவரால் முறையான கிரிக்கெட் காலணிகளை கூட வாங்க முடியவில்லை. சௌராஷ்டிரா அணியில் இடம்பெற்றிருந்த ஷெல்டன் ஜாக்சன்தான் சக்காரியாவுக்கு உதவிகளை செய்து வந்துள்ளார். குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவதற்கான காலணிகளை அவர் தான் வாங்கிக் கொடுத்துள்ளார்.
மறுபுறத்தில் விபத்தில் சிக்கிய சக்காரியாவின் தந்தை படுத்த படுக்கையாகிவிட்டார். இதனால், சக்காரியா கிடைத்த வேலைக்குச் சென்று கிரிக்கெட் போட்டியிலும், பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். சேத்தன் சக்காரியா வருமானத்தில்தான் அவரின் குடும்பமே இயங்குகிறது.
ஆனால், பல நாட்களாக பயிற்சி, போட்டிகள் என்று சக்காரியா சென்றுவிடுவதால், குடும்பத்துக்கு தேவையான உதவிகளை அவரின் தாய்மாமாதான் கவனித்து வந்தார். கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறு சக்காரியாவுக்கு ஆலோசனையையும், ஆதரவையும் வழங்கி, குடும்பத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்தார்.
ஆர்வமிகுதியால் சக்காரியா தீவிரமான பந்து வீச்சுப் பயிற்சி எடுத்தபோது, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். ஏறக்குறைய ஓராண்டாக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சக்காரியாவுக்கு தேவையான மருத்துவச் செலவுகளையும், அவரின் குடும்பத்துக்கான தேவையையும் அவரின் தாய்மாமாதான் கவனித்தார். அதுமட்டுமல்லாமல் சக்காரியா கல்லூரிப் படிப்புக்கான கட்டணம், பரீட்சைக் கட்டணத்தையும் அவரின் தாய்மாமாதான் செலுத்தினார்.
நடராஜனைப் போல் வாய்ப்பு கிடைக்குமா?
நடராஜனைப் போலவே இவரும் வெகுகாலம் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடியவர்தான். அவரைப் போலவே காயத்தால், வறுமையால் அவதிப்பட்டவர். தன் முதல் ஐ.பி.எல் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முத்திரை பதித்திருக்கிறார்.
எனவே, தொடர்ந்து சக்காரியாவுக்கு சரியான வாய்ப்புகள் கொடுக்கப்படும் பட்சத்தில் இந்த சீசனின் முன்னணி நட்சத்திரமாக நிச்சயம் சக்காரியா உருவெடுப்பார்.