ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்திலும் பஞ்சாப் அணிக்கு தோல்வியே ஏற்பட்டுள்ளது.
ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
அபுதாபியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக முதலிரண்டு விக்கெட்டுகளும் 12 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
ஆனாலும் திறமையை வெளிப்படுத்திய சுப்மன் கில் 57 ஓட்டங்களையும் அணித்தலைவர் தினேஸ் கார்த்திக் 29 பந்துகளில் 58 ஓட்டங்களையும் பெற்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களைப் பெற்றது.
மொஹமட் சமி, அர்ஸ்தீப் சிங், ரவி பிஸ்னோய் ஆகியார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
165 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலளித்தாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் சார்பாக அணித்தலைவர் லோகேஸ் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி முதல் விக்கெட்டுக்காக 115 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
மயன்க் அகர்வால் 36 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க நிகோலஸ் பூரான் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் லோகேஸ் ராகுல் 58 பந்துகளில் 74 ஓட்ங்களைப் பெற்றும் அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
கடைசி 16 பந்துகளில் 21 ஓட்டங்களே தேவைப்பட்ட போதிலும் பஞ்சாப் அணி வீரர்களால் அதனை எட்டமுடியவில்லை.
கடைசி பந்தில் 7 ஓட்டங்கள் தேவையாக இருந்த போது மெக்ஸ்வெல் விளாசிய பந்து பௌண்டரியாக கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களைப் பெற்று தோல்வியுற்றது.
இது தொடரில் பஞ்சாப் அணி அடைந்த ஆறாவது தோல்வி என்பதுடன் கொல்கத்தா பெற்ற நான்காவது வெற்றியாகும்.