November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை டெஸ்ட் அணியில் இளம் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு வாய்ப்பு!

photo: Facebook/ Praveen Jayawickrama

பங்களாதேஷ் அணியுடனான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளராள பிரவீன் ஜயவிக்ரமவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள பங்களாதேஷ் அணி வீரர்கள் நேற்று இலங்கையை வந்தடைந்தனர்.

இந்த நிலையில், பங்களாதேஷ் அணியுடன் விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் குழாம் இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.

இதில் அண்மையில் நிறைவடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது உபாதைக்குள்ளாகிய சுழல் பந்துவீச்சாளர் லசித் எம்புல்தெனிய பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என அறவிக்கப்பட்டுள்ளது.

இதனால், லசித் எம்புல்தெனியவுக்குப் பதிலாக உள்ளூர் போட்டிகளில் அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற 22 வயதுடைய இடது கை சுழல் பந்துவீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம இலங்கை டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 10 உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ள இவர், 69 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கள் என்ற சிறந்த பந்துவீச்சுப் பெறுமதியையும் பதிவுசெய்துள்ளார்.

இதேவேளை, இறுதியா கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த மற்றுமொரு இளம் சுழல் பந்துவீச்சாளரான துவிந்து திலகரட்னவுக்கும் இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹஷான் திலகரட்னவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகத்தைப் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்த 22 வயதுடைய இளம் வீரரான பெதும் நிஸ்ஸங்க பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுள்ளது.

அவரது தொடையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவருக்கு இந்த டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் கன்னி சதமடித்து சாதனை படைத்த பெதும் நிஸ்ஸங்க, அந்தத் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைச் சதத்தை எடுத்தார்.

எனினும், பெதும் நிஸ்ஸங்க தற்போது குணமடைந்துள்ளதாகவும், இதனால் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தோள்பட்டை உபாதைக்குள்ளாகியுள்ள குசல் மெண்டிஸுக்கு பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது தனிப்பட்ட காரணங்களுக்காக இடைநடுவில் நாடு திரும்பிய அஞ்சலோ மெதிவ்ஸ் பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாம் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி. எதிர்வரும் 15 ஆம் திகதி பல்லேகலைக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்கள். அதனைத்தொடர்ந்து 16 ஆம் திகதி முதல் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.