Photo: IPL/ Twitter
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல் தொடரின் நான்காவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி பந்து வரை துணிச்சல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணித் தலைவர் சஞ்சு சாம்சனின் போராட்டம் வீணானது.
ஆனபோதும், ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கியமான ஆட்டத்தை சஞ்சு சாம்சன் விளையாடியிருந்ததுடன், தான் அணித் தலைவராக செயற்பட்ட முதல் போட்டியிலேயே பல சாதனைகளையும் அவர் முறியடித்தார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்கஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்களை எடுத்து தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன், 63 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உட்பட 119 ஓட்டங்களை எடுத்து அசத்தியிருந்தார்.
33 பந்துகளில் அரைச் சதம் அடித்த அவர், தொடர்ந்து 54 பந்துகளில் சதம் அடித்தார். அதாவது, அடுத்த 21 பந்துகளில் 50 ஓட்டங்களை எட்டினார். ஒரு கேப்டன் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதற்கு உதாரணமாக சஞ்சு சாம்சன் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதையும், ரசிகர்களின் மனதையும் வென்றார்.
இதேநேரம், சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் அடிக்கும் 3-வது சதம் இதுவாகும். குறிப்பாக, ஐபிஎல் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே தலைவர் ஒருவர் பெற்றுக்கொண்ட முதலாவது சதமும் இதுவாகும்.
இந்த நிலையில், போட்டியின் பிறகு தனது அதிரடி சதம் மற்றும் தோல்வி குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்தப் போட்டியில் 2-வது பகுதியில் என்னுடைய இன்னிங்ஸ்தான் நான் விளையாடியதிலேயே சிறந்ததாகக் கருதுகிறேன். முதல் பாதி இன்னிங்ஸில் என்னால் சரியான அளவில் பந்துகளை அடிக்க நேரம் கிடைக்கவில்லை. அதற்காக அதிகமான நேரம் எடுத்துக்கொண்டேன். பந்துவீச்சாளர்களின் சரியான பந்துகளுக்கு மதிப்பளித்து ஒரு ஓட்டம், 2 ஓட்டங்களாக எடுத்தேன்.
எனக்கு சரியான நேரம் கிடைத்தவுடன் என்னுடைய வழக்கமான ஷாட்களை 2-வது பாதியில் ஆடத் தொடங்கினேன். என்னுடைய வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பிய பின் மிகவும் ரசித்துதான் துடுப்பாட்டம் செய்தேன்.
என்னுடைய திறமை மீது கவனம் செலுத்தும் போது இயல்பாக அது நடந்துவிடுகிறது. பந்தைப் பார்த்தவுடன் அடிக்கத் தோன்றுகிறது.
சில நேரங்களில் அவசரப்பட்டு ஷாட்களை ஆடி ஆட்டமிழந்திருக்கிறேன். ஆனால், இயல்பான ஆட்டத்திலிருந்து மாறவில்லை. இந்தப் போட்டியைப் பற்றி என்னால் சொல்ல முடியவில்லை. மிகவும் நெருக்கடியான ஆட்டமாக அமைந்தது. ஆனால், எனக்கு துரதிஷ்டமாக அமைந்தது. இதற்கு மேல் என்னால் ஏதும் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
சஞ்சு சாம்சனின் சதனைகள் தொடர்பான விபரங்கள்
தோல்வியடைந்த ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள்
128 ஓட்டங்கள் – ரிஷாப் பான்ட் 2018 ஆம் ஆண்டு
119 ஓட்டங்கள் – சஞ்சு சாம்சன் 2021 ஆம் ஆண்டு
117 ஓட்டங்கள் – சைமண்ஸ் 2008 ஆம் ஆண்டு
இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்
120 ஓட்டங்கள் – வால்தாத்தி 2011 ஆம் ஆண்டு
119 ஓட்டங்கள் – விரேந்திர சேவாக் 2011 ஆம் ஆண்டு
119 ஓட்டங்கள் – சஞ்சு சாம்சன் 2021 ஆண்டு
ஐ.பி.எலில் அதிக சதங்கள் எடுத்த வீரர்கள்
6 – கிறிஸ் கெய்ல்
5 – விராட் கோலி
4 – ஷேன் வொட்சன், டேவிட் வோர்னர்
3 – ஏபி டிவிலியர்ஸ், சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக 2000 ஓட்டங்களை கடந்த வீரர்கள்
அஜிங்கிய ரஹானே (2810)
ஷேன் வொட்சன் (2372)
சஞ்சு சாம்சன் (2000)