
Photo: Indian Premier League Twitter
ஐ.பி.எல் டி20 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ் டோனிக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதை அடுத்து, இந்த அபராதத்தை ஐ.பி.எல் நிர்வாகம் டோனிக்கு விதித்துள்ளது.
மும்பை வான்கடே விளையாட்டரங்கில் நடைபெற்ற 14ஆவது ஐ.பி.எல் டி-20 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்களால் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றிகொண்டது.
ஷிகர் தவான், ப்ரித்திவி ஷா ஆகியோரின் அதிரடி அரைச் சதங்கள் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வெற்றியை இலகுபடுத்தியது.
அத்துடன், ரிஷாப் பன்ட் தனது தலைமைப் பதவியை வெற்றியுடன் ஆரம்பிக்கவும் அவர்கள் உதவினர்.
கடந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை அணி அபார வெற்றியுடன் தொடரை ஆரம்பம் செய்த நிலையில், இந்த சீசனை தோல்வியுடன் ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், தோல்வி மட்டுமின்றி மற்றொரு சிக்கலையும் நேற்றைய போட்டியில் சென்னை அணி எதிர்கொண்டுள்ளது.
இந்தப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மெதுவாக பந்துவீசினார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் பந்துவீசாமல் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டனர்.
இதற்காக ஐ.பி.எல் விதிமுறைப்படி சென்னை அணியின் தலைவர் டோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது இந்த சீசனின் முதல் தவறு என்பதால் வெறும் அபராதம் மட்டும் விதிக்கப்படுவதாகவும், தவறு தொடரும் பட்சத்தில் டோனிக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் எனவும் ஐ.பி.எல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.பி.எல் விதிப்படி 20 ஓவர்களையும் 90 நிமிடங்களில் (மேலதிக நேரத்தையும் சேர்த்து) பந்துவீச வேண்டும். அதாவது ஒரு மணி நேரத்தில் 14.1 ஓவரை வீசி முடிக்க வேண்டும். 90ஆவது நிமிடத்தில் 20ஆவது ஓவரை துவங்கியிருக்க வேண்டும். இல்லை என்றால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.