January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டி; கோலூன்றிப் பாய்தலில் யாழ். வீரர் புவிதரன் முதலாமிடம்

Photo: ThePapare.com

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்திம் ஏற்பாடு செய்துள்ள இந்த வருடத்தின் முதலாவது தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டித் தொடரில் வட மாகாணத்தைச் சேர்ந்த 15 வீரர்கள் பங்குபற்றியிருந்த அதேவேளை,இதில் கலந்துகொண்டிருந்த பெரும்பாலான வீரர்கள் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ.புவிதரன் 4.90 மீற்றர் உயரத்தை பாய்ந்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு முதல்தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் பங்குகொண்ட புவிதரன், கோலூன்றிப் பாய்தலில் தனது அதிசிறந்த உயரத்தை பதிவு செய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

புவிதரன் பாய்ந்த இந்த உயரமானது,கோலூன்றிப் பாய்தலில் இலங்கை வீரரொருவரினால் பாயப்பட்ட அதிசிறந்த இரண்டாவது உயரமாக இடம்பிடித்தது.

இலங்கையின் கோலூன்றிப் பாய்தலுக்கான சாதனையை 2017இல் இஷார சந்தருவன் (5.11 மீற்றர்) நிலைநாட்டினார்.

இது இவ்வாறிருக்க, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற புவிதரன், இறுதியாக கடந்த 2019 செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தார்.

அதன்பிறகு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.82 மீற்றர் உயரத்தை பாய்ந்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

எது எவ்வாறாயினும்,கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்காக புவிதரன் தெரிவாகியிருந்த போதிலும், நாட்டில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவரால் கொழும்புக்கு வர முடியாமல் போனதனால் குறித்த போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை தவறவிட்டார்.

இதேவேளை, கனிஷ்ட பிரிவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனந்தன் கஜன் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியில் அவர் 57.94 மீற்றர் தூரத்தை எறிந்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடியுள்ள கஜன், தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியொன்றில் முதல்தடவையாக வெற்றியினைப் பதிவு செய்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.