November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாக்கு நீரிணையில் குமார் ஆனந்தனின் கின்னஸ் சாதனையை முறியடிக்கும் முயற்சியில் இலங்கை விமானப்படை வீரர்

இலங்கையைச் சேர்ந்த குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையைக் கடந்து  நிலைநாட்டிய 50 வருடங்கள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரொஷான் அபேசுந்தர, பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

அவர் நீந்துவதற்கு எதிர்பார்க்கும் மொத்த தூரம் 59.3 கிலோமீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,ரொஷான் அபேசுந்தரவுக்கு வெப்ப நீச்சல் ஜேர்சி ஒன்றை இலங்கை விமானப்படை தளபதி கையளித்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த வீரர் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை கடக்கும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார் என அறிவித்தது.

பாக்கு நீரிணையை முதன்முதலாக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நவரத்தினசாமி என்ற இலங்கைத் தமிழர் 1954 ஆம் ஆண்டு நீந்தி கடந்தார்.

இதனையடுத்து, 1966ஆம் ஆண்டில் கொல்கத்தாவைச் சேர்ந்த மிகிர்சென் என்பவ நீந்திக் கடந்தார்.

1971 ஆம் ஆண்டில் ‘ஆழிக்குமரன்’ என அழைக்கப்படும் குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையினை இரு புறங்களில் இருந்தும் கடந்து கின்னஸ் சாதனை படைத்தார்.

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையும் பின்னர் அங்கிருந்து மீண்டும் தலைமன்னார் வரையுமான 51 கிலோ மீட்டர் தூரத்தை 51 மணி நேரத்தில் அவர் கடந்திருந்தார்.

இந்த நிலையில், 51 வருட குமார் ஆனந்தனின் சாதனையை முறியடிக்கும் பயணத்தை இலங்கை விமானப்படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரொஷான் அபேசுந்தர ஆரம்பிக்கவுள்ளார்.

இதன்படி, இந்த சாதனையை இவர் முறியடிக்கும் பட்சத்தில் பாக்கு நீரிணையைக் கடந்து சாதனை படைக்கவுள்ள மூன்றாவது இலங்கையராகவரலாற்றில் இடம்பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பாக்கு நீரிணையை இதுவரை 14 பேர் மட்டுமே கடந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதில் தமிழ்நாடு சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான தூரத்தினை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.