January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி வில்லியர்ஸின் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது ரோயல் சேலஞ்சர்ஸ்

Photo: IPL Twitter

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல் தொடரின் முதல் லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் போட்டியின் 14-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியனான மும்பை இந்தியன்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் விளையாடியது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூர் அணித் தலைவர் விராத் கோலி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

ரோஹித் சர்மா 19 ஓட்டங்களை எடுத்து ரன் அவுட்டானார். சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் 31 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

கிறிஸ் லின் 35 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ஓட்டங்களை எடுத்து அரைச் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 13 ஓட்டங்களையும், இஷான் கிஷன் 28 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொணடது.

பெங்களூர் அணி சார்பில் ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 27 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.

இதையடுத்து 160 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தர், விராட் கோலி களமிறங்கினர்.

சுந்தர் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரஜத் படிதர் 8 ஓட்டங்களை எடுத்து ஏமாற்றினார். தொடர்ந்து வந்த அனுபவ வீரர் கிளென் மெக்ஸ்வெல்லும்,விராட் கோலியும் 52 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர்.

எனினும், அணியின் ஓட்ட எண்ணிக்கை 98 ஆக இருக்கும்போது விராட் கோலி 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, கிளென் மெக்ஸ்வெல் 39 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி காட்டி அரைச் சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.