July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மொயின் அலி கிரிக்கெட்டுக்கு வந்திருக்காவிட்டால் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்திருப்பார்; தஸ்லிமா நஸ்ரின் கருத்தால் சர்ச்சை

இங்கிலாந்து சுழல்பந்து வீச்சாளர் மொயின் அலி கிரிக்கெட் விளையாடாமல் இருந்திருந்தால் ஐ.எஸ்.அமைப்பில் சேர்ந்திருப்பார் என பங்களாதேஷ் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

14 ஆவது ஐ.பி.எல் சீசன் எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் மே 30 ஆம் திகதி வரை நடைபெற இருக்கின்ற நிலையில்,   அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன. இதையடுத்து சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மும்பையில் மோதவுள்ளன.

இதனிடையே, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலி, இன்னும் இரண்டு தினங்களில் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இதற்காக, சக அணி வீரர்களுடன் மும்பையில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் குறித்து ட்வீட்டரில் பதிவிட்டுள்ள பங்களாதேஷைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், இஸ்லாம் மத எதிர்ப்பாளருமான தஸ்லிமா நஸ்ரின், ‘மொயின் அலி கிரிக்கெட் விளையாடாமல் இருந்திருந்தால் ஐ.எஸ்.அமைப்பில் சேர்ந்திருப்பார்’ என  பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

தஸ்லிமாவின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். ‘நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? எனக்கு தெரிந்து நீங்கள் நலமாக இல்லை என்று நினைக்கிறேன்’ என்று அவர் கூறி உள்ளார்.

இந்த நிலையில், தஸ்லிமா நஸ்ரின்  அளித்துள்ள விளக்கத்தில் ,’என்னை வெறுப்பவர்களுக்கு தெரியும் நான் மொயின் அலி குறித்து பதிவிட்ட கருத்து இயற்கையாகவே கிண்டலானது .ஆனால், அவர்கள் இஸ்லாத்தை மதமயமாக்க முயற்சிக்கிறார்கள், இஸ்லாமிய வெறித்தனத்தை நான் எதிர்க்கிறேன். ஏனெனில், என்னை அவமானப்படுத்தும் ஒரு பிரச்சனையை அவர்கள் செய்தார்கள். மனிதகுலத்தின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று, பெண்கள் சார்பு இடதுசாரிகள் பெண்கள் விரோத இஸ்லாமியவாதிகளை ஆதரிப்பது’ என தஸ்லிமா நஸ்ரின் கூறி உள்ளார்.

இதேவேளை, விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்க்காமல், தஸ்லிமா நஸ்ரின் எதற்காக மொயின் அலியை மதத்துடன் தொடர்புபடுத்தி அருவருக்கத்தக்க வகையில் டுவீட் வெளியிட வேண்டும், அவர் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு டுவீட் வெளியிட்டுள்ளார் என பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

முன்னதாக, சென்னை அணியின் புதிய ஜேர்சியில் இருக்கும் மதுபான நிறுவனத்தின் இலச்சினையை அகற்ற வேண்டும் என்று மொயின் அலி கூறியதாக சர்ச்சை கிளம்பியது. ஆனால் இதுபோன்ற எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை என்று சென்னை அணி நிர்வாகம் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.