January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை? பஞ்சாபுடன் இன்று மோதல்

Photo: BCCI/ IPL/Chennai Super Kings

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று தடவைகள் சாம்பியனாகியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை வழமைக்கு மாறாக தோல்விகளால் துவண்டு போயுள்ளது.

கடந்த காலத்தில் முதல் 7 ஆட்டங்களில் 60 க்கு மேற்பட்ட வெற்றி வீதத்தை தக்க வைத்திருந்த சென்னை அணி இந்தமுறை 4 ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்து கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் சென்னை அணி தனது ஐந்தாவது போட்டியில் இன்று கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கின்றது.

இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற வேண்டியது கட்டாயமாகும். எனினும், அது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

சென்னை அணியில் பெயர் போன வீரர்களான ஷேன் வொட்ஸன், முரளி விஜய், கேதர் ஜாதவ், அணித்தலைவர் தோனி என துடுப்பாட்ட பட்டாளங்கள் இருந்தாலும் அவர்களால் இதுவரை பிரகாசிக்க முடியவில்லை. ஒட்டுமொத்த அணியும் பெப் டு பிலெசியை நம்பியே இருக்கிறது.

சன்ரைசஸ் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் அணித்தலைவர் தோனி 47 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்த போதிலும் அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

களத்தில் நிற்கும் போது அவருக்கு இருமல் ஏற்பட்டதுடன் அதற்காக அவர் அவ்வப்போது மருத்துவ உதவியுடன் ஓய்வெடுத்திருந்தார்.

பந்துவீச்சிலும் சென்னை அணி பெரிதாக பிரகாசிப்பதாக இல்லை. ரவிந்தர ஜடெஜா 4 ஆட்டங்களில் வெறும் 2 விக்கெட்டுகளையே வீழ்த்தியுள்ளார்.

ஷாம் கரன் ஆறுதல் அளிக்கிறார். டுவேன் பிராவோ, அம்பாட்டி ராயுடு ஆகியோர் பிரகாசித்தால் சென்னை அணியால் மீண்டெழ முடியும்.

எவ்வாறாயினும், சென்னை அணி துடுப்பாட்டத்தில் பிரகாசித்தால் நிச்சயமாக கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியை வீழ்த்த முடியும். குறிப்பாக பஞ்சாப் அணியின் பந்துவீச்சு சுமாராகவே உள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பஞ்சாப் அணியை 160 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திவிட்டு துடுப்பாட்ட பலத்தை நிரூபித்தி சென்னை அணி வெற்றிபெற முயற்சிப்பது மாத்திரமே தற்போதைக்குள்ள ஒரேவழி.

Photo: BCCI/IPL/Kings XI Punjab

கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியைப் பொறுத்த மட்டில் அணித்தலைவர் லோகேஷ் ராகுல் துடுப்பாட்டத்தில் கலக்கிவருகிறார்.

கடந்த ஆட்டங்களில் சதமடித்த அவர் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராகத் திகழ்கிறார்.

மயன்க் அகர்வால், நிகோலஸ் பூரான், கிளென் மெக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக ஓட்டங்களைப் பெறக் கூடியவர்கள்.

இவர்களைக் கட்டுப்படுத்தினால் மாத்திரமே சென்னை அணியால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும்.

இதேவேளை, டேவிட் வோனர் தலைமையிலான சன்ரைசஸ் அணி இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது.