கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபனில் சேர்பியாவின் நொவெக் ஜோகோவிச் நான்காம் சுற்றுக்கு முன்னேறினார்.
மூன்றாம் சுற்றுப் போட்டியில் அவர் கொலம்பியாவின் டேனியல் எலாஹி காலனை வெற்றிகொண்டார். சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் நொவெக் ஜோகோவிச் இந்தமுறை 19 ஆவது டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இலக்கு வைத்து களமிறங்கியுள்ளார்.
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றில் ஜோகோவிச்சை எதிர்கொண்ட டேனியல் முதல் செட்டில் சற்று சவால் விடுத்தார்.
முதல் செட் ஆட்டம் 25 நிமிடங்கள் நீடித்த நிலையில் அதனை 6-0, 6-3, 6-2 எனும் நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றியீட்டினார்.
இது பிரெஞ்ச் ஓபனில் அவர் தொடர்ச்சியாக நான்காம் சுற்றுக்கு முன்னேறிய 11 ஆவது சந்தர்ப்பமாகும்.
மற்றொரு நட்சத்திர வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால் பிரெஞ்ச் ஓபனில் நான்காம் சுற்றை உறுதி செய்துகொண்டார். 19 கிராண்ட்ஸலாம் பட்டங்களை வென்றுள்ள நடால் 12 தடவைகள் பிரெஞ்ச் ஓபனில் சாம்பியனாகியுள்ளார்.
இந்தமுறை நான்காம் சுற்றில் அவர் 213 ஆம் நிலையிலுள்ள அமெரிக்காவின் செபஸ்தியன் கொர்டாவை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
செபஸ்தியன் கொர்டாவின் தந்தையும் டென்னிஸ் வீரர் என்பதுடன் அவர் 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓபனில் சாம்பியனாகியுள்ளதுடன் 1992 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் செக்.குடியரசின் பெட்ரா கிவிட்டோவா மற்றும் சோபியா கெனின் ஆகியோர் நான்காம் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
பெட்ரா கிவிட்டோவா இரண்டு தடவைகள் விம்பிள்டன் பட்டத்தை வென்றவர் என்பதுடன் சோபியா கெனின் அவுஸ்திரேலிய ஓபனில் சாம்பியனாகியுள்ளார்.