July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பங்களாதேஷில் ஊரடங்கு அமுல்;இலங்கை-பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் மீண்டும் சிக்கலில்

Photo: Bangladesh Cricket Board Twitter

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுவதில் மீண்டும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

பங்களாதேஷில் தற்போது வேகமாகப் பரவி வரும் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக, திங்கட்கிழமை முதல் ஒருவார காலத்துக்கு நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இம்மாதம் 12ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், பங்களாதேஷில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளமை தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷாமுதீன் சௌத்ரி கருத்து வெளியிடுகையில்,

டெஸ்ட் தொடரை பிற்போடுவதற்கான அறிவிப்புகள் தொடர்பில் தற்போதுவரை கலந்துரையாடவில்லை. தொடருக்கான ஆயத்தங்கள் தற்போதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனாலும், நாட்டின் தற்போதைய நிலையை நாம் அவதானித்து வருகின்றோம். அரசாங்கம் ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில், உடனடியாக தொடர் நடைபெறுவது சந்தேகத்துக்கிடமானது என என்னால் தெரிவிக்க முடியாது.

எனவே இன்னும் ஓரிரண்டு நாட்களில், அரச அதிகாரிகளுடன் இலங்கைக்கான கிரிக்கெட் தொடர் குறித்து கலந்துரையாடி முடிவை அறிவிப்போம் என நிஷாமுதீன் சௌத்ரி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மீண்டும் இந்த தொடர் கடந்த ஒக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், இலங்கை அரசாங்கத்தின் கொவிட்-19 தொற்று விதிமுறைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் இரண்டு கிரிக்கெட் சபைகளும் கலந்துரையாடியதன் அடிப்படையில், தொடரை மீண்டும் நடத்துவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

எனவே, இவ்வாறு இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் தொடரே தற்போது நடைபெறவிருந்தாலும், பங்களாதேஷில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேநேரம், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்கள் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளனர்.

இதனையடுத்து, ஏப்ரல் 17ஆம், 18ஆம் திகதிகளில் கட்டுநாயக்க சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் பங்களாதேஷ் அணி, இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளது.

அதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 21 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 29 ஆம் திகதியும் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.