Photo: BCCI/IPL
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கெபிடெல்ஸ் வெற்றிகொண்டது.
இந்த ஆட்டத்தில் டெல்லி அணி நிர்ணயித்த 228 ஓட்டங்களை நோக்கி சிறப்பாக ஆடிய கொல்கத்தா அணி 210 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
சார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டம் துடுப்பாட்ட வீரர்களின் ஆற்றல்கள் நிறைந்ததாகவே அமைந்திருந்தது. ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்த டெல்லி அணி ஆரம்பம் முதலே சவாலாக ஓட்டங்களைக் குவித்தது.
அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 38 பந்துகளில் 88 ஓட்டங்களைக் குவித்தார். அவர் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளை விளாசினார். பிருத்திவ் ஸோ 66 ஓட்டங்களையும், ரிஸப் பாண்ட் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
டெல்லி கெபிடெல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்களைக் குவித்தது. ஆன்ரே ரஸல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மோர்கன், திரிபாட்டியின் அதிரடி ஆட்டம்
இமாலய இலக்காக 229 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முதல் விக்கெட் 8 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. சுனில் நரைன் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில் 28 ஓட்டங்களுடனும், நித்திஸ் ராணா 58 ஓட்டங்களுடனும் வெளியேறினர். ஆன்ரே ரஸல் அதிரடியாக ஆட முயற்சித்த போதிலும் அவரால் ஒரு சிக்ஸரையே விளாச முடிந்தது.
மிக லாவகமாக பந்துவீசிய கெகிஸோ ரபாடாவிடம் ஆன்ரே ரஸல் சிக்கினார். அணித்தலைவர் தினேஸ் கார்த்திக் மீண்டும் சொதப்பலாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழந்தார்.
அதிரடி காட்டிய இங்கிலாந்தின் இயன் மோர்கன் 18 பந்துகளில் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 44 ஓட்டங்களையும், ராகுல் திரிபாட்டி 16 பந்துகளில் 3 சிக்ஸ்ர்கள், 3 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
எனினும், அவர்கள் ஆட்டமிழந்த பின்னர் கொல்கத்தா அணி வெற்றிபெறுவது சூனியமானது. இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.
ஆன்ரிச் நொர்ட்ஜி 3 விக்கெட்டுகளையும், பட்டேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
டெல்லி கெபிடெல்ஸ் அணி 4 ஆட்டங்களில் 3 வெற்றிகளைப் பெற்று நிகர ஓட்ட வேகத்துடன் புள்ளிகள் பட்டியலில் முன்னிலைப் பெற்றுள்ளது.
கொல்கத்தா அணி 4 ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்திலுள்ளது.