July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெங்களூர் அணியின் வீரர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா தொற்று

Photo : RCB Twitter

விராத் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இளம் வீரரான தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். டி-20 தொடரின் 14 ஆவது சீசன் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்காக, வீரர்கள் தீவிர  பயிற்சி மேற்கொண்டுவரும் நிலையில், சில வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி வருவதால், ஐ.பி.எல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் அக்ஸர் பட்டேலுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி மும்பை ஹோட்டலுக்கு அக்ஸர் பட்டேல் வந்தபோது அவருக்கு எடுக்கப்பட்ட  பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில் அடுத்த சில நாட்களில் மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதுடன், அவரை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஐ.பி.எல். தொடரில் தேவ்தத் படிக்கல் அறிமுகமானார். இடது கை துடுப்பாட்ட வீரரான அவர், 473 ஓட்டங்களை எடுத்து வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

ஆதலால், இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனில் தேவ்தத் படிக்கல்லின் ஆட்டம் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனாவில் தேவ்தத் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவரால் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த முஷ்டாக் அலி டி-20 தொடரில் 6 போட்டிகளில் 218 ஓட்டங்களை அவர் குவித்தார். அதன்பிறகு நடைபெற்ற விஜய் ஹசாரே கிண்ண ஒருநாள் தொடரில் 7 போட்டிகளில் 737 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் நிதிஷ் ராணா  கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்பிறகு, மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்குள்,சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சமூக ஊடகப் பிரிவைச் சார்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

எது எவ்வாறாயினும், ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் 4 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், இதுவரை மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.