July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் சபைக்கு முகாமைத்துவ குழுவொன்றை நியமிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக முகாமைத்துவ குழுவொன்றை நியமிக்குமாறு சட்ட மா அதிபர், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நடைபெறும் வரை 5 பேர் கொண்ட நிர்வாகக் குழுவொன்றை இலங்கை கிரிக்கெட் சபைக்கு நியமிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, தற்போதுள்ள இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகத்திற்கு பதிலாக ஐவரடங்கிய முகாமைத்துவக் குழுவொன்றை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அநுராத விஜேகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் கடந்த மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

ஆகவே, நிர்வாக செயற்பாட்டிற்காக இடைக்கால குழுவொன்றை நியமிக்குமாறு கோரி, இம்முறை தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ள நிஷாந்த ரணதுங்க தலைமையிலான கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தினால் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அத்துடன், தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு சட்ட ரீதியானதா என கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தினால் வினவப்பட்ட நிலையில், குறித்த கடிதம் தொடர்பில் சட்டமா அதிபரினால் பரிசீலிக்கப்பட்டதையடுத்து, இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன் தெரிவித்துள்ளார்.