July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயரம் பாய்தலில் இலங்கையின் பதினேழு வருட சாதனையை முறியடித்த உஷான் பெரேரா

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் இலங்கையை சேர்ந்த உஷான் திவங்க பெரேரா,இலங்கையின் பதினேழு வருடங்கள் பழமையான உயரம் பாய்தல் சாதனையை முறியடித்துள்ளார்.

டெக்சாஸ் ரிலேஸ் சம்பியன்ஷிப் போட்டிகளில் களமிறங்கிய அவர், A பிரிவில் 2.28 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கையின் உயரம் பாய்தலில் தேசிய சம்பியனான மஞ்சுள குமார, 2004ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் 2005 தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் உள்ளிட்ட இரண்டு போட்டிகளிலும் 2.27 மீற்றர் உயரம் தாவி நிலைநாட்டிய சாதனையை 17 வருடங்களுக்கு பிறகு உஷான் பெரேராவினால் முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அத்துடன், உஷான் பெரேராவின் இந்த சாதனையானது இந்த வருடத்தில் உயரம் பாய்தல் வீரரொருவரினால் எட்டப்பட்ட உலகின் அதிசிறந்த 3 ஆவது உயரமாகவும் இடம்பிடித்தது.

இதனிடையே, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் உயரம் பாய்தல் நிகழ்ச்சிக்கு தகுதிபெறுவதற்கான அடைவுமட்டம் 2.33 மீற்றர் ஆகும். இதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஜுன் மாதம் 29ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அடுத்த வரும் மாதங்களில் உஷான் பெரேரா, ஒலிம்பிக் அடைவுமட்டத்தினை பூர்த்தி செய்து டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.