இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான திசர பெரேரா, உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இலங்கையின் பிரதான கிரிக்கெட் கழகங்களுக்கிடையிலான Major League ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதில் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்த இராணுவ கிரிக்கெட் கழகத்தின் தலைவரான திசர பெரேரா, டில்ஹான் கூரேவின் ஓவரில் ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசினார்.
அதுமாத்திரமின்றி, இலங்கையின் உள்ளூர் முதல்தர ஒருநாள் போட்டிகளில் பெறப்பட்ட அதிவேகமான இரண்டாவது அரைச் சதத்தினை 13 பந்துகளில் பதிவு செய்து புதிய சாதனையையும் அவர் படைத்தார்.
2006 ஆம் ஆண்டில் கௌஷல்ய வீரரட்ன (12 பந்துகள்), 2011இல் ஆர்.கே க்ளைன்வெல்ட் (14 பந்துகள்) ஆகிய இருவரும் அதிகவேகமாக அரைச் சதங்களை எடுத்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திசர பெரேராவின் அரைச் சதம் மற்றும் அஷான் ரன்திக, ஹிமாஷ லியனகேவின் சதங்களின் உதவியுடன் இராணுவ கிரிக்கெட் கழகம் 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களை எடுத்தது.
எனினும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 73 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், சீரற்ற காலநிலையால் போட்டி முடிவுகள் எட்டப்படாமல் கைவிடப்பட்டது.