November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்: கடைசி ஓவரில் சொதப்பிய சென்னை

Photo: BCCI/IPL
ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

165 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய சென்னை அணி சார்பாக தலைவர் தோனி, ரவிந்திர ஜடேஜா ஆகியோரால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை.

துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்த சன்ரைசர்ஸ் அணியின் முதல் விக்கெட் நான்காவது பந்தில் வீழ்த்தப்பட்டது.

ஜொனி பெயார்ட்ஸ்டோவ் ஓட்டமின்றி நடையைக் கட்டினார். அணித்தலைவர் டேவிட் வார்னர் 29 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பெப் டு பிலெசியின் அபார பிடியெடுப்பில் ஆட்டமிழந்தார்.

மனிஷ் பாண்ட்டே 21 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்களைப் பெற்றார். கேன் வில்லியம்ஸன் 9 ஓட்டங்களுடன் வெளியேற சன்ரைசர்ஸ் அணி 11 ஓவர்களில் 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

என்றாலும் பிரியம் கார்க் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி ஐந்தாம் விக்கெட்டுக்காக 42 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து சன்ரைசர்ஸ் அணியை சவாலான நிலைக்கு உயர்த்தியது.

அபிஷேக் சர்மா 24 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

இறுதிவரை ஆட்டமிழக்காத பிரியம் கார்க் 26 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களைப் பெற்றார்.

சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களைப் பெற்றது.

Photo: BCCI/IPL/ CSK

தீபக் சஹார் 4 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், பியூஸ் சாவ்லா, சர்துல் தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

165 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மந்த கதியில் ஓட்டங்களைப் பெற்று வெறுப்பேற்றினர்.

கடைசி இடத்தை பிடித்த சென்னை

2,3 ஓவர்களில் 4 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்த போது ஷேன் வாட்ஸன் ஒரு ஓட்டத்துடன் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சில் போல்டானார்.

தொடர்ந்து அம்பாட்டி ராயுடு 8 ஓட்டங்களுடன் வெளியேற பெப் டு பிலெசி 22 ஓட்டங்களுட் ரன் அவுட் ஆனார்.

கேதர் யாதவ் வந்ததைவிட வேகமாக 3 ஓட்டங்களுடன் அரங்கம் திரும்ப, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஓவர்களில் 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்விப் பாதைக்குள் தள்ளப்பட்டிருந்தது.

ஆனாலும், நம்பிக்கை அளிக்கும் விதமாகத் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் தோனியும் ரவிந்திர ஜடேஜாவும் 50 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

ரவிந்திர ஜடேஜா 35 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் தோனி 36 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த போதிலும் அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

கடைசி ஓவரில் 28 ஓட்டங்கள் தேவைப்பட்ட போதிலும் தோனியால் சிக்ஸர்களை விளாச முடிவில்லை என்பதுடன் 20 ஓட்டங்களையே பெற முடிந்தது. ஷாம் கரன் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களைப் பெற்று 7 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 3.1 ஓவரில் 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், தி.நடராஜன் 4 ஓவர்களில் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அப்துல் சமாட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தமுறை ஐபிஎல் தொடரில் இது சென்னை அணி அடைந்த மூன்றாவது தோல்வி. சன்ரைசர்ஸ் அணிக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி.

புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி இப்போது கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.