November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜூலை 31 ஐ தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்க அமைச்சரவை அனுமதி

ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் டங்கன் வைட் 400 மீற்றர் தடை தாண்டல் போட்டியில், வெள்ளிப் பதக்கத்தை வென்ற நாளான ஜூலை மாதம் 31 ஆம் திகதியை தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இலங்கையில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 31 ஆம் திகதியை, தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்த விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதற்கான முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

முன்னதாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதியை, தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்துவதற்கு 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், சித்திரை புதுவருட தயார்படுத்தல்கள் காரணமாக குறித்த தினத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்க முடியாதென்பதால், அதனை பிறிதொரு தினத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஜூலை மாதம் 31ஆம் திகதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.