November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பளுதூக்கல் போட்டியில் இரண்டு இலங்கை சாதனைகளை முறியடித்த யாழ். வீராங்கனை ஆர்ஷிகா

இலங்கையின் முன்னணி நட்சத்திர வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா விஜயபாஸ்கர் பெண்களுக்கான தேசிய பளுதூக்கல் தகுதிகாண் போட்டியில் பங்குபற்றி தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பளுதூக்கல் குழாத்தில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கான பளுதூக்கல் தகுதிகாண் போட்டி பொலன்னறுவையில் உள்ள கல்லேல்லவில் நடைபெற்றது.

இதில் யாழ்ப்பாணம் பளுதூக்கல் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான 71 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்குகொண்ட ஆர்ஷிகா, ஸ்னெச் (Snatch) முறையில் 77 கிலோ கிராம் எடையை ஒரே தடவையில் தூக்கி ஸ்னெச் முறைக்கான புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.

முன்னதாக 2019 இல் தெற்காசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தகுதிகாண் போட்டியில் இதே எடைப் பிரிவில் 76 கிலோ கிராம் எடையைத் தூக்கி ஸ்னெச் பிரிவில் ஆர்ஷிகா தேசிய சாதனை நிலைநாட்டியிருந்தார்.

இதனிடையே, குறித்த போட்டியில் க்ளீன் அண்ட் ஜேர்க் (Clean and jerk) முறையில் 95 கிலோ கிராம் எடையைத் தூக்கிய ஆர்ஷிகா, ஒட்டுமொத்தமாக 172 கிலோ கிராம் எடையைத் தூக்கி புதிய சாதனை படைத்தார். இதற்குமுன் 171 கிலோ கிராம் எடையே சாதனையாக இருந்தது.

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக எந்தவொரு போட்டிகளும் நடைபெறாத காரணத்தினால் தொடர்ச்சியான பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு பெரும்பாலான வீரர்களுக்கு கிடைக்கவில்லை.

ஆர்ஷிகாவும் குறித்த போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே பயிற்சிகளை மேற்கொண்டு தனது சொந்த சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார்.

தனது சொந்த சாதனையை இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் புதுப்பிக்க கிடைத்தமை பெரு மகிழ்ச்சியைத் தருவதாக ஆஷிகா குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஆர்ஷிகாவின் பயிற்சியாளரா கச் செயற்பட்டு வருகின்ற அவருடைய தந்தை விஜயபாஸ்கர் கருத்து தெரிவிக்கையில்;

பெண்களுக்கான பளுதூக்கல் போட்டிகளில் பல்வேறு எடைப் பிரிவுகளில் அண்மைக்காலமாக பல தேசிய சாதனைகளை நிலைநாட்டி வருகின்ற ஆர்ஷிகா,இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பளுதூக்கல் சிறப்புக் குழுவுக்கு தெரிவாகாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் ஆர்ஷிகாவிடம் தோற்றவர்களுக்கு தேசிய குழாத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளமை எல்லாவற்றுக்கும் மேலாக வியப்பைத் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

19 வயதான ஆர்ஷிகா, இறுதியாக 2019 ஆம் ஆண்டில் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.