July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீதி பாதுகாப்பு உலக டி-20 தொடர்: இறுதிப் போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி

இந்தியாவின் ராய்பூரில் நடைபெற்றுவரும் வீதி பாதுகாப்பு உலக டி-20 தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை லெஜண்ட்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இலங்கை லெஜன்ட்ஸ் அணி தென்ஆபிரிக்கா லெஜன்ட்ஸ் அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகளால் இலகு வெற்றியினைப் பதிவு செய்து தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது அணியாக இடம்பிடித்தது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் தலைவர் திலகரட்ன டில்ஷான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தென் ஆப்பிரிக்கா லெஜன்ட்ஸ் அணிக்கு வழங்கியிருந்தார்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆபிரிக்கா லெஜன்ட்ஸ் அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் நுவன் குலசேகரவின் அதிரடி பந்துவீச்சு காரணமாக அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 125 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

தென்ஆபிரிக்கா லெஜன்ட்ஸ் அணி சார்பில் அரைச்சதம் பூர்த்தி செய்த விக்கெட் காப்பாளர் வேன் விக் 47 பந்துகளில் 8 பவுண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இலங்கை லெஜன்ட்ஸ் அணி சார்பாக நுவன் குலசேகர 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், சனத் ஜயசூரிய, பர்வீஸ் மஹரூப் மற்றும் கௌசல்ய வீரரட்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 126 ஓட்டங்களை  நோக்கி  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை லெஜன்ட்ஸ், 17.2 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 129 ஓட்டங்களை பெற்று வெற்று பெற்றது.

இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த வீரர்களில் ஒருவரான சின்தக்க ஜயசிங்க 25 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 47 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மறுமுனையில், உபுல் தரங்க  39 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

தென்ஆபிரிக்கா லெஜன்ட்ஸ் அணி சார்பில் அல்வைரோ பீட்டர்சன் மற்றும் மக்கயா நிட்னி ஆகியோர் தலா ஒரு விக்கெட்  வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகன் விருதை இலங்கையின் நுவன் குலசேகர பெற்றுக்கொண்டார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை லெஜன்ட்ஸ் அணி, வீதி பாதுகாப்பு உலக டி-20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய லெஜன்ட்ஸ் அணியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்ளவிருக்கிறது.