அமெரிக்காவின் தடகள மற்றும் திறந்தவெளி ஓட்ட பயிற்றுவிப்பாளர்கள் சங்கத்தின் (USTFCCCA)- டிவிசன்-2 உள்ளரங்கப் பிரிவில் இந்த ஆண்டுக்கான “சிறந்த மைதான விளையாட்டு வீரர்” விருதினை இலங்கையைச் சேர்ந்த உயரம் பாய்தல் வீரர் உஷான் பெரேரா வென்றுள்ளார்.
இவ்வருட ஆரம்பம் முதல் அமெரிக்காவின் பல்கலைக்கழங்கள்- மட்ட உள்ளரங்க மெய்வல்லுனர் போட்டிகளில் உஷான் பெரேரா வெளிப்படுத்தியிருந்த திறமைகளை அடிப்படையாக வைத்தே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலாத்தில் உள்ள ஏ அன்ட் எம் பல்கலைக்கழகத்தின் வணிகத்துறையில் கற்றுவரும் இலங்கையின் இளம் உயரம்-பாய்தல் வீரரான உஷான் திவங்க பெரேரா, கடந்த பெப்ரவரி மாதம் லோன் ஸ்டார் கொன்பெரன்ஸ் (Lone Star Conference) உள்ளரங்க மெய்வல்லுனர் தொடரில் 2.25 மீட்டர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கம் வென்றதுடன் உள்ளரங்க உயரம் பாய்தலில் புதிய இலங்கை சாதனையும் படைத்தார்.
இதனிடையே, கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க பல்கலைக்கழகங்கள்- மட்ட (டிவிஷன் 2) உள்ளரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரிலும் உஷான், 2.26 மீட்டர் உயரத்தைத் தாவி இரண்டாவது தடவையாகவும் இலங்கை சாதனையை முறியடித்து தங்கம் வென்று அசத்தினார்.
அத்துடன், இலங்கையின் மெய்வல்லுனர் வரலாற்றில் உயரம் பாய்தலில் பதிவாகிய இரண்டாவது அதிசிறந்த உயரமாகவும் இது இடம்பிடித்தது.
ஏற்கனவே, அமெரிக்காவின் மத்திய பிரிவுக்கான வருடத்தின் சிறந்த மைதான நிகழ்ச்சிகளுக்கான வீரர் விருதையும், பல்கலைக்கழகத்தின் வருடத்தின் பிரபல்யமிக்க வீரருக்கான விருதையும் உஷான் பெரேரா தட்டிக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
உயரம் பாய்தல் வீரர்களுக்கான உலக தரவரிசையில் 20ஆவது இடத்திலும், ஆசிய வீரர்களுக்கான தரவரிசையில் முதலாம் இடத்திலும் உஷான் பெரேரா உள்ளார்.
நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவரான 23 வயதுடைய உஷான் பெரேரா, இறுதியாக 2019இல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
இதனையடுத்து, இலங்கை சார்பாக உயரம் பாய்தலில் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் மற்றும் ஆசிய தங்கப் பதக்கம் வென்றவருமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்தின் வழிகாட்டலினால் புலமைப்பரிசில் ஒன்றைப் பெற்றுக்கொண்டு கடந்த வருடம் முதல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உயரம் பாய்தலுக்கான மேலதிக பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.