இலங்கை கிரிக்கெட் சபையின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம், மல்லாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீ பாஸ்கரன் கடினப் பந்து கிரிக்கெட் மைதானம்’ திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதித் தலைவர் ரவீன் விக்ரமரட்ன, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மைதானத்தை திறந்து வைத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் கிராமிய கிரிக்கெட் வளர்ச்சி என்ற நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட இந்த கிரிக்கெட் மைதானத்தின் காணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தனவந்தர்களில் ஒருவரும், சமூக சேவையாளருமான மறைந்த திரு. ஸ்ரீ பாஸ்கரனின் குடும்பத்தினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டதாகும்.
எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள இந்த மைதானத்திற்கு, இலங்கை கிரிக்கெட் சபையின் மூலம் ஆரம்ப கட்டமாக இரண்டு பயிற்சி வலைத்தொகுதிகள், மெட்டின் ஆடுகளம், உடை மாற்றும் அறை மற்றும் ஒரு அலுவலகம் என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி மூன்று கட்டங்களாக மேம்படுத்தப்பட எதிர்பார்க்கப்படும் இந்த கிரிக்கெட் மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் 2022ஆம் ஆண்டளவில் நிறைவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேநேரம், இலங்கையின் தேசிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக இடம்பெறவுள்ள இந்த மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் நிறைவுக்கு வரும் போது புற்தரை ஆடுகளம், பார்வையாளர் அரங்கு, உணவகம் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.
இதனிடையே, மல்லாகம் கிரிக்கெட் மைதானத்தின் அனைத்து செயற்பாடுகளும் யாழ் கிரிக்கெட் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், யாழ் மாவட்டத்தில் உள்ள 26 கிரிக்கெட் கழகங்கள் மற்றும் 16 பாடசாலைகளுக்கு இங்கு பயிற்சிகளை மேற்கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் யாழ். மாவட்ட செயலாளர் கணபதி பிள்ளை, இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி குழுவின் தலைவர் கமல் தர்மசிறி, யாழ். பிரதேச சபையின் செயலாளர் எஸ் சிவாசிறி, 51 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கே.பீ.எஸ்.பிரேமலால், யாழ். கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அமலதாஸ் செரேனஸ் நிஷாந்தன், அதன் செயலாளர் காசிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.