January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உத்வேகமான பந்துவீச்சால் பஞ்சாப்பை வென்றது மும்பை!

Photo: BCCI / IPL

13வது ஐபிஎல் அரங்கில் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில்-மும்பை இந்தியன்ஸ் அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கிங்ஸ் இலவன் பஞ்சாப் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.

முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் முதல் விக்கெட்டை இழந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குயின்டன் டி கொக் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சூரியகுமார் யாதவ் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 3.5 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனாலும், அணித்தலைவருக்கே உரிய பாணியில் துடுப்பெடுத்தாடிய ரோஹித் சர்மா 45 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்களைப் பெற்றார்.

இஷான் கிஷான் 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க கிரான் பொலார்டும் ஹர்திக் பாண்ட்யாவும் அதிரடியாக 23 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து மும்பை அணியை சவாலான நிலைக்கு கொண்டுசென்றனர்.

கிரான் பொலார்ட் 20 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்ட்யா 11 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 சிக்ஸர்களுடன் 30 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

192 ஓட்டங்கள் இலக்கு

மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் ஷெல்டோன் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், மொஹமட் சமி 4 ஓவர்களில் 36 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், கே. கௌதம் 4 ஓவர்களில் 45 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Photo: BCCI / IPL

ஜேம்ஸ் நீசாம் 4 ஓவர்களில் 52 ஓட்டங்களையும், ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 37 ஓட்டங்களையும் வாரி வழங்கினார்கள். என்றாலும் அவர்களால் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்த முடியவில்லை.

192 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 1.5 ஓவர்களில் 38 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

அணித்தலைவர் லோகேஷ் ராகுல் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வால் 25 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

நிகோலஸ் பூரான் 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை.

மத்திய வரிசை மற்றும் பின்வரிசை வீரர்கள் ஆமை வேகத்தில் ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தனர்.

கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களையே பெற முடிந்தது.

ஜஸ்பிரிட் பும்ரா 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் அபட்டின்சன் 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 4 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றியை இலகுவாக்கினர்.

இது இந்தமுறை ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய நான்காவது ஆட்டம் என்பதுடன் அவர்கள் பெற்ற இரண்டாவது வெற்றியாகும்.

அதன்படி புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி முதலிடத்தை பெற்றுள்ளது.

கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 4 ஆட்டங்களில் ஒன்றில் மாத்திரம் வெற்றிபெற்று ஆறாமிடத்தில் இருக்கிறது.