November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீதிப் பாதுகாப்பு உலகத் தொடர்: புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்ட இலங்கை லெஜண்ட்ஸ் அணி!

இந்தியாவில் நடைபெற்றுவரும் வீதிப் பாதுகாப்பு உலக டி-20 தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கை லெஜண்ட்ஸ் அணியை இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளி இந்தியா லெஜண்ட்ஸ் அணி முதலிடத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ராஜ்பூரில் நடைபெற்றுவரும் வீதி பாதுகாப்பு உலக டி-20 தொடரின் லீக் ஆட்டங்கள் அனைத்தும் இன்று நிறைவுக்கு வரவுள்ளன.

இம்முறை தொடரில் ஐந்து போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் மாத்திரம் தோல்வியையும் தழுவிய இலங்கை லெஜண்ட்ஸ் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி, இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கெதிராக 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியமையால் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதன்படி, வீதி பாதுகாப்பு உலக டி-200 தொடரின் புள்ளிப்பட்டியலில் மொத்தமாக 5 வெற்றிகளைப் பதிவுசெய்து 1.7771 என்ற நிகர ஓட்டவேக அடிப்படையில் 20 புள்ளிகளுடன் இந்தியாவைப் பின்தள்ளி இலங்கை லெஜண்ட்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்தது.

மறுபுறத்தில் இந்திய லெஜண்ட்ஸ் அணி, 20 புள்ளிகளைப் பெற்று நிகர ஒட்டவேக அடிப்படையில் (1.733) இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட போதிலும், இந்திய லெஜண்ட்ஸ் அணி இலங்கையை வீழ்த்திய காரணத்தால் திருத்தியமைக்கப்பட்ட புதிய புள்ளிப்பட்டியலின் படி இலங்கை லெஜண்ட்ஸ் அணி இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.

எனவே போட்டி விதிமுறைகளில் இந்த தீடீர் மாற்றத்தை போட்டி ஏற்பாட்டுக்குழு நேற்றைய தினம் நடைபெற்ற பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் பிறகு அறிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

இதன்படி இலங்கை லெஜண்ட்ஸ் அணியானது, புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட தென்னாபிரிக்கா லெஜண்ட்ஸ் அணியுடன் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

அதேபோல, இன்று நடைபெறவுள்ள இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையிலான கடைசி லீக் போட்டியில் வெற்றி பெறும் அணி, நாளை நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புள்ளிப்பட்டியலில் ஆரம்பத்தில் முதலிடத்தைப் பெற்றிருந்த இலங்கை அணிக்கு எதிராக போட்டி ஏற்பாட்டுக் குழு சூழ்ச்சி செய்து அணியை பின் தள்ளியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.