மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில்,நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட பந்துவீச கூடுதலான நேரம் எடுத்துக்கொண்ட காரணத்தால் இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது.
இதன்படி, இலங்கை அணி வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி அன்டிகுவாவில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 3-0 என இழந்தது.
இந்தப்போட்டியின் போது, திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர்களை பந்துவீச தவறியுள்ளதாக, போட்டி மத்தியஸ்தர் ரிச்சி ரிச்சட்சன் கண்டறிந்து, இந்த தண்டனையை வழங்கியுள்ளார்.
ஐ.சி.சி.யின் புதிய விதிமுறையின்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்களை வீசுவதற்கு தவறினால், ஒரு ஓவருக்கு 20 சதவீதம் போட்டிக்கட்டணத்தில் அபராதமாக விதிக்கப்படும்.
எனவே, 2 ஓவர்களை வீசத்தவறிய நிலையில், இலங்கை அணியின் வீரர்களின் போட்டிக்கட்டணத்தில் 40 சதவீதம் அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஐ.சி.சி.யின் ஆடவர் உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடரின் விதிமுறையின் படி, ஓவர்களை தகுந்த நேரத்துக்குள் வீசத்தவறும் பட்சத்தில் ஒரு ஓவருக்கு, ஒரு புள்ளி வீதம் புள்ளிப்பட்டியலில் குறைக்கப்படும். எனவே, சுப்பர் லீக்கில் 2 புள்ளிகளையும் இலங்கை அணி இழந்துள்ளது.
இதேநேரம், இந்தப்போட்டியின் 35ஆவது ஓவரில் மேற்கிந்திய தீவுகள் வீரர் நிக்கொலஸ் பூரனை, இலங்கை அணியின் தனுஷ்க குணதிலக்க ஆட்டமிழக்கச்செய்தார்.
இந்த ஆட்டமிழப்பின் போது, ஐ.சி.சி விதிமுறையை மீறி, ஆக்ரோஷத்துடன் நிக்கொலஸ் பூரனை வழியனுப்பி வைத்ததற்காக, தனுஷ்க குணதிலக்கவை போட்டி மத்தியஸ்தர் கண்டித்துள்ளார்.
இதன்போது தனுஷ்க குணதிலக்க தகாத வார்த்தைகளை பயன்படுத்திய காரணத்தால், அவருடைய ஒழுக்காற்று பதிவில், ஒரு தரமிறக்கல் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த இரண்டு குற்றங்களையும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் ஏற்றுக்கொண்டதன் காரணத்தால், மேலதிக விசாரணைகளுக்கு அவசியமில்லை என போட்டி மத்தியஸ்தர் குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.