
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் உள்ளூர் கழகங்களுக்கிடையிலான Major ரி-20 லீக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் அனைத்தும் நிறைவுக்கு வந்துள்ளன.
இதில் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற களுத்துறை நகர விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த பொலிஸ் விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
பொலிஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக பந்துவீச்சில் மிரட்டிய சுஜான் மயுர 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், கனகரட்னம் கபில்ராஜ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதில் உள்ளூர் முதல்தரப் போட்டியொன்றில் முதல்தடவையாக களமிறங்கிய யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான கபில்ராஜ், பொலிஸ் கழகம் சார்பில் முதல்தடவையாக களமிறங்கி அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
முன்னதாக 2017 இல் நடைபெற்ற வடக்கின் மாபெரும் சமரில் 10 விக்கெட்டை பதிவு செய்த அவர், யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், 2017 மற்றும் 2018 ஆகிய வருடங்களில் நடைபெற்ற வடக்கின் சமரில் தலா 10 விக்கெட்டுகள் எடுத்து போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதுகளை இரண்டு தடவைகள் தட்டிச்சென்றார்.
இதனிடையே, கடந்த வருடம் இலங்கையின் மிகவும் பழைமை வாய்ந்த கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான தமிழ் யூனியன் கழகங்களில் இணைந்துகொண்ட அவர், அந்த கழகத்தின் 23 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாடி இருந்தார்.
எனினும், கடந்த வருடத்திலிருந்து அவர் இலங்கையின் பொலிஸ் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்றார்.
இது இவ்வாறிருக்க, கடந்த டிசம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் டி-20 தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.