அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் கணுக்கால் உபாதை காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகிக்கொண்டார்.
இரண்டாம் சுற்றில் விளையாடவிருந்த நிலையில் அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிப் போட்டியில் விளையாடிய போது அவருக்கு கணுக்காலில் உபாதை ஏற்பட்டது.
இதனால் பிரெஞ்ச் ஓபனில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.
எனினும், பிரெஞ்ச் ஓபனில் களமிறங்கிய செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தார்.
இந்நிலையில் உபாதை மேலும் அதிகமாகி இருப்பதால் தன்னால் விளையாட முடியாதெனக்கூறி அவர் தொடரிலிருந்து விலகிக்கொண்டார்.
கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை மூன்று தடவைகள் வென்றுள்ள 39 வயதான செரீனா வில்லியம்ஸ், தனது 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை குறிவைத்து இந்தமுறை களமிறங்கியிருந்தார்.
சர்வதேச டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரான மார்க்ரட் கோர்ட்- இன் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் என்ற சாதனையை முறியடிக்கும் செரீனாவின் கனவு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தள்ளிப்போய் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.