இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.
அன்டிகுவாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, மேற்கிந்திய வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும், இளம் துடுப்பாட்ட வீரர்களான அஷேன் பண்டார மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாடி அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.
இந்த வீரர்கள் இருவரினதும் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பாக 7ஆம் விக்கெட்டுக்காக வனிந்து ஹசரங்க, அஷேன் பண்டார ஜோடி 118 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது. இந்த இணைப்பாட்டம் புதிய சாதனையாக பதிவாகியுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி சார்பாக 7ஆவது விக்கெட்டுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட 2ஆவது அதிசிறந்த இணைப்பாட்டமாக இது பதிவாகியது.
இதில் வனிந்து ஹசரங்க தனது கன்னி ஒருநாள் அரைச்சதத்தை பெற்றுக்கொண்டார். 60 பந்துகளுக்கு முகம் கொடுத்த அவர், 3 சிக்ஸர்கள்,7 பவுண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இதன்மூலம் 8 ஆம் இலக்கத்தில் களமிறங்கி அதிக ஓட்டங்களை எடுத்த நுவன் குலசேகரவின் சாதனையை வனிந்து ஹசரங்க முறியடித்தார்.
மறுமுனையில், அஷேன் பண்டார தனது 2ஆவது அரைச்சதத்துடன் 55 ஓட்டங்களை பெற்றார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பில் அகில் ஹொசைன் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அல்சாரி ஜொசேப் மற்றும் ஜேசன் மொஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
மேற்கிந்திய அணி சார்பாக டர்ரன் ப்ராவோ தன்னுடைய 4ஆவது சத்தத்தை பெற்றுக்கொண்டார். 132 பந்துகளுக்கு முகம் கொடுத்த அவர் 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
அதேநேரம், ஷாய் ஹோப் (64), அணித்தலைவர் கீரன் பொலார்ட் (53) ஆகியோரும் அரைச்சதங்கள் பெற்று அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகன் விருதினை மேற்கிந்திய தீவுகள் அணியின் டர்ரன் ப்ராவோ பெற்றுக்கொள்ள, தொடர் நாயகனாக ஷாய் ஹோப் தெரிவாகினார்.
அதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 க்கு 0 என்ற அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது.
இத்தொடரில் அடைந்த தோல்வியின் காரணமாக ஆடவர் உலகக் கிண்ண சுப்பர் லீக் அணிகள் நிலையில் புள்ளிகள் எதுவும் பெறாமல் இலங்கை அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.